Description
அவனி சுந்தரி
சுமார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளுடனும், அந்த கதுப்புக்கள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுடனும், சிவந்த பெரும் கண்களுடனும், மானிட அரக்கன் போல் காட்சியளித்த பூதலன், அவனது உலக்கைக் கைகளில் தாங்கி வந்தது வெறும் சிறுவன் சடலமல்லவென்றாலும், அதுவும் நடு வயதைத் தாண்டியவனுடைய பலமான உடலென்றாலும், பூதலன் ஒரு குழந்தையைத் தாய் தூக்குவதுபோல வெகு லாகவமாகவும் எந்தவிதக் கஷ்டமின்றியும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பயபக்தியுடனேயே தூக்கி வந்தான். அவன் அடிமேலடி எடுத்து வைத்து மெள்ள அந்த உருவத்தை அந்த மாமணிமண்டபத்தின் ஒருபுறத்திலிருந்த நீண்ட மஞ்சமொன்றில் மிக லேசாகக் கிடத்திவிட்டு சற்றுத் தள்ளி அந்த உடலுக்குத் தலைவணங்கி நின்றான்.
அந்தச் சடலத்தை அவன் தூக்கிவந்தபோதே அதன் முகத்தில் பட்டுவிட்ட ஒளியால் அது யாரென்பதைப் புரிந்து கொண்ட புலவர் கோவூர் கிழாரும், சோழ இளவல் நலங்கிள்ளியும் பிரமை பிடித்துச் சில விநாடிகள் நின்றார்களென்றாலும், மஞ்சத்தில் அது கிடத்தப் பட்டவுடன் மஞ்சத்துக்கருகே சென்று, இருவரும் மண்டியிட்டுத் தலைவணங்கவே செய்தார்கள். தலை வணங்கிய பின்பு புலவர் கோவூர் கிழார் நீண்டநேரம் ஏதோ வாயில் முணு முணுத்துக் கொண்டிருந்தார். ஆனால், நலங்கிள்ளி மட்டும் சில விநாடிகளில் எழுந்திருந்து அந்த சடலத்தைக் கூர்ந்து ஆராய்ந்தான். அதன் தலையிலிருந்த நவரத்தினக் கிரீடம் அப்பொழுதும் பெரும் சோபையைக் கிளப்பியிருந்தது. நடுத்தர வயதைச் சற்றே தாண்டிய அந்த சடலத்தின் தலைக்குழல்கள் கலையாமல் மிக ஒழுங்காகக் கன்னங்களில் விழுந்ததன்றி, மூடிக்கிடந்த கண்களையுடைய முகத்திலும் கம்பீரம் சிறிதும் குறையவில்லை. அதன் இடையே செருகப்பட்டிருந்த குறுவாளும், கச்சையில் அப்பொழுதும் தொங்கிக்கொண்டிருந்த பெருவாளும், அப்பொழுதும் அந்த உடலுக்குடையவன் போருக்குச் சீறி எழுவானோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. நீண்ட கைகளில் ஒன்று பஞ்சணையின் ஒரு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்ததால், கால்கள் இரண்டையும் ஒழுங்காகவே இருக்கும்படி பூதலன் படுக்க விட்டிருந்ததால் அந்த உடலுக்குடையவன் நித்திரையில் ஆழ்ந்திருப்பது போன்ற பிரமையே அளித்தது.
இப்படி நலங்கிள்ளி அந்த உருவத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், மெள்ள மண்டியிட்ட நிலையிலிருந்து எழுந்திருந்த புலவர் பெருமானான கோவூர் கிழார், அவனி சுந்தரியைத் திரும்பி நோக்கினார், சினம் வீசிய கண்களுடன்.
“இதற்கு என்ன பொருள்?” என்ற சீற்றம் குரலில் தொனிக்கக் கேட்டார்.
அவனி சுந்தரியின் கண்களில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை. கோவூர் கிழாரின் கோபம் அவள் உள்ளத்தைத் தினையளவும் தொட்டதாகக்கூடத் தெரியவில்லை. அவள் சர்வசாதாரணமான குரலில் பதில் கூறினாள்: “புலவர் பெருமானுக்குத் தெரியாத பொருள் எனக்கென்ன தெரியப் போகிறது?” என்று.
புலவர் பெருமான் மீண்டுமொரு முறை மஞ்சத்தையும் நோக்கி அவனி சுந்தரியையும் நோக்கினார்.
“இது யார் தெரியுமா உனக்கு?” என்று வினவினார்.
அவனி சுந்தரியின் அச்சமற்ற கண்கள் கிழாரின் கருமைக் கண்களை நிர்ப்பயமாகச் சந்தித்தன.
“தெரியாமலா, உடலை இத்தனை பக்குவப்படுத்திப் புலவர் இல்லத்துக்குக் கொண்டு வந்தேன்?” என்று பதில் கேள்வியும் கேட்டாள்.
புலவருக்கு யாது சொல்வதென்று தெரியாததால் சில விநாடிகள் குழம்பிவிட்டு, “இவன்… இவன்…” என்று இரு முறை தடுமாறினார்.
“புகாரின் மன்னர் கிள்ளிவளவன்…” இதை மெதுவாகவும் மரியாதையாகவும் சொன்னாள் அவனி சுந்தரி.
“இதன் விளைவு தெரியுமா உனக்கு?” என்று புலவர் மீண்டும் கேட்டபோது, விளைவை நினைத்து அவர் உடல் லேசாக நடுங்கியது.
Reviews
There are no reviews yet.