Description
இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை, தப்பியோடும் அந்த இருவரையும் காரிருளில் கடுமையாகவே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களை நோக்கித் திடீரென கொள்ளிவாய்ப் பிசாசைப்போல் வாயைத் திறந்து அக்கினி ஜ்வாலையையும் கக்கத் தொடங்கியது. அபராஜிதனோடு திரும்பி நோக்கிய காரி, தீ ஜ்வாலையைக் கண்டு ஏதும் புரியாதவனாய், “அதென்ன பிரபு?” என்று வினவினான்.
“எதிரிகள் எறிந்த தீப்பந்தங்களில் சில பாதைத் திருப்பத்திலிருந்த மூங்கிற் புதர்களில் விழுந்திருக்கும்.புதர் பற்றி எரிந்து காட்டுத் தீ பரவியிருக்கும்!” என்றான் அபராஜிதன்.
“பாதை குறுகலாயிற்றே! மூங்கிற் புதர் தீப்பிடித்தால் வெடிக்குமே. அக்கம் பக்கத்தில் ஓடவும் இடமிருக்காதே” என்று காரிவளவன் கேட்டான்.
“மூங்கிற் புதரும் பாதையை ஒட்டித்தான் வளர்ந்திருக்கிறது. வெடித்தால் ஜ்வாலையுடன் மூங்கில்கள் பாதையில் தான் விழும். சாதாரணமாகவே காட்டுத் தீ வேகமாகப் பரவும். அதுவும் தென்றடிலக்கும்போது கேட்க வேண்டியதேயில்லை. எதிரிகள் தப்புவது குதிரைக் கொம்பு தான்…” என்று சொல்லிக் கொண்டுபோன அபராஜிதன் சட்டென்று பேச்சை நிறுத்தி, “காரி…” என்றான்
“என்ன பிரபு?”
“நமது நண்பர்களும் எதிரிகளுடன் சிக்கிக் கொண்டிருப்பார்களே!” தீயைத் தாண்டி வரமுடியாது. எதிரி வீரர்களோ ஏராளமாயிருக்கிறார்கள். நம்மைத் துரத்தமுடியாததால் திரும்பி அவர்களை வளைத்துக் கொண்டால்?”
காரி உடனே பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேரங்கழித்துப் பதில் சொன்னபோது அவன் குரலில் வருத்தமும் கலந்திருந்தது. “ஆமாம் பிரபு! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?…” என்றான்.
“திரும்பிப் போய்ப் பார்த்தால் என்ன?”
“பார்த்துப் பிரயோசனம்? காட்டுத் தீயைத் தாண்டி நாம் உட் செல்ல முடியுமா? அப்படியே சென்றாலும் பாக்கியிருக்கும் வீரர்களைச் சமாளித்து நண்பர்களைக் காப்பாற்ற முடியுமா?”
“தீயைத் தாண்டிச் செல்ல வேண்டாம். பக்கத்துச் சரிவுகளில் தொத்தி, சுற்றுவட்டமாகச் செல்ல வழியிருக்கிறதா என்று பார்க்கலாமே. வீரர்கள் அதிகமிருந்தால்தானென்ன? மடிவதானால் நாம் எல்லோரும் ஒன்றாக மடியலாமல்லவா?”
“முடியாது பிரபு! உங்களை மீண்டும் ஆபத்தில் சிக்க வைத்தால் நான் நாட்டுக்குத் துரோகம் செய்தவனாவேன் என் நண்பர்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள். பாண்டி நாட்டின் விதியை நிர்ணயிக்க வேண்டிய உங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்பது தேவரின் விருப்பம். அதை நான் எந்தக் காரணத்தைக் கொண்டும் மீற முடியாது!” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான் காரிவளவன்.
மேலே ஏதும் பேச வழியில்லாமல் அபராஜிதன் ஆகாயத்தை நோக்கிக் கண்களை உயர்த்தினான். ‘இப்பேர்பட்ட பக்தர்களிருக்கும்போது எதற்கு மீண்டும் மரணத்தை நாடுகிறாய்? தப்பிவிடு’ என்று பரிகசிப்பது போல் விண்ணின் தாரகைகள் கண்ணடித்தன. அவற்றைப் பார்க்கக்கூட வெட்கமாயிருந்தது அபராஜிதனுக்கு. பெரியவீரர்களான மூன்று பேரை எதிரிகளிடம் சிக்கவிட்டு ஓடுவது வீரனான அவனுக்குப் பெரும் வெறுப்பாயிருந்தது. நிவர்த்திக்க முடியாத அந்தக் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட காரி, “கவலைப்படாதீர்கள், பிரபு! தேவரைக் குடிசையில் யாரும் தேடமாட்டார்கள். மற்ற இருவரும் போர்த் தந்திரத்தை நன்றாக அறிந்தவர்கள். அவர்களைக் கொல்வதும் அவ்வளவு எளிதல்ல” என்று ஆசுவாசப்படுத்தினான். தன் உள்ளத்திற்கு ஆறுதலளிப்பதற்காகச் சொல்லப்பட்ட அந்த உபசார வார்த்தைகள் அபராஜிதனுக்கு எவ்வித மனச் சாந்தியையும் அளிக்காவிட்டாலும் காரியின் பிடிவாதத்தாலும் வேறு எதையும் அச்சமயம் செய்ய முடியாதென்ற நிர்க்கதியான நிலைமையாலும் எதிர்ப்பக்கமிருந்த சமவெளியை நோக்கிக் கண்களைத் திருப்பி வெறித்துப் பார்த்துக்கொண்டே பயணம் செய்தான். இப்படிச சற்று தூரம் சென்றதும் சிறு வாய்க்கால் ஒன்று குறுக்கிட்டது. வாய்க்காலைக் கண்டதும் குதூகலத்துடன் காரி கூச்சலிட்டு, “பிரபு! வாய்க்கால் வந்து விட்டது” என்றான்.
“எந்த வாய்க்கால்?’!
“பாண்டிய நாட்டிலிருந்து மழவராயன் பிராந்தியத்தைப் பிரிக்கும் காட்டு வாய்க்கால். இதைத் தாண்டி விட்டால் அபாயமில்லை.”
இப்படிச் சொல்லி விட்டுக் காரி புரவியைத் தூண்டி விடவே துரிதமான தூரப் பிரயாணத்தால் அலுத்திருந்த அந்தக் குதிரையும் வாய்க்காலில் சரேலென இறங்கித் தண்ணீரை வாரியடித்துக் கொண்டு எதிர்க்கரை ஏறியது. கரையில் குதிரையை நிறுத்தி இருவரும் கீழே இறங்கியதும், ஈட்டி பிடுங்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்ட காரி, அபராஜிதனை நோக்கி, “பிரபு! மேலங்கியைச் சற்றுக் கழற்றுங்கள். காயத்தை அலம்பி ரத்தத்தை நிறுத்தத் துணி வைத்துக் கட்டுகிறேன்” என்றான்.
கன்னி மாடம்
Reviews
There are no reviews yet.