இந்தியா ஒரு மாபெரும் பன்மியத் தேசம். இந்தப் பன்மியம் பல நூறாக இருந்தாலும் திராவிடம் ஆரியம் ஆகிய இருபெரும் தேசியங்களின் வரலாறு மிகக் கூர்மையாக இயங்குகிறது. இதில் பண்டைய வரலாறு புராண வரலாறாக உருவாக்கப்பட்டது. இப்போது வரலாறு தரவுகள் அடிப்படையிலும் ஆய்வுகள் அடிப்படையிலும் அணுகப்படுகின்றன. இந்த நூல் ஒரு புதிய வரலாறெழுதியலை முன்னெடுக்கிறது.
நூலாசிரியர் வி. சிவசாமி இலங்கை யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியர்; பாளி, பண்டைய இந்திய வரலாறு இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர். ஆரியர்களின் ஆதி வரலாற்றையும் பண்பாட்டையும் பாளி சமஸ்கிருதப் பின்னணியில் அலசுகிறார். இந்தியாவில் ஆரியர் வருகையையும் வாழ்வையும் திராவிடப் பின்புலத்தில் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
தொல்லியல், இலக்கியம், மொழியியல், தொன்மை வரலாறு முதலான சான்றுகள் மூலம் ரிக் வேதகாலம் கிமு 1800-1100 எனவும், பிந்தைய வேதகாலம் கிமு 1100-500 எனவும் நிறுவுகிறார். ஆரியர்களின் சமூக நிலையையும், பொருளாதார நிலையையும், பிற்கால மாற்றங்களையும் வெகு நுட்பமாகப் பகுப்பாய்வு செய்து விளக்குகிறார்.
ஆரியர்கள் பற்றிய புறவய எழுத்துக்கள் மிக அதிகம். அகவய மீளுருவாக்கம் மிகக் குறைவு. இந்த நூலின் தனிச் சிறப்பு என்னவென்றால் ஆரியர்களின் அகவயமான தரவுகளைக் கொண்டே அவர்களின் ஆதி இருப்பிடம், இந்தோ-ஆரிய – ஈரானியத் தொடர்புகள், புலப்பெயர்வு, இந்தியக் குடியேற்றம், பிற்கால மாற்றங்கள் முதலான அனைத்தையும் ஒரு நீள்பார்வையோடும் ஆழ்பார்வையோடும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். ஆரியர் திராவிடர் விவாதங்களில் இந்த நூல் மிகவும் தனித்துவமான ஒரு நூல்.
-பக்தவத்சல பாரதி
**
ஆரியர் பற்றிக் கட்டமைத்துள்ள நமது மனத்தடைகளை மீறி அவர்களை வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொள்ள
இந்த நூல் உதவும்.
– எம். ஏ. நுஃமான்
Reviews
There are no reviews yet.