Description
உலகம் இதைக் குறித்து தவித்துக் கொண்டிருக்கிறது என்று விசாரித்தால் ஒன்று தெரியவரும். வாழ்வு பற்றியும் வாழ்வுக்கு அப்பால் இருக்கின்ற வாழ்வு பற்றியும் உலகம் அயராது அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு இதைப் பற்றி அறிந்தவர்கள் தான் பதில் சொல்ல முடியும். இதைப் பற்றி அறிந்தவர்களுக்கு குரு என்று பெயர்.
கடவுளைப் பற்றி பேசுபவர்களுக்கு பிரசங்கிகள் என்று பெயர். பெரும்பான்மையான உபன்யாசிகள் கடவுளை அறிந்திலர்.
கடவுள் சிலைகளோடு இருப்பவர்களோ, மதத்தின் நியமங்களோடு இருப்பவர்களோ, மடத்தின் கட்டுப்பாடுகளோடு இருப்பவர்களோ கடவுளை அறிந்திருக்க முடியாது. இதுதான் கடவுள் என்று நின்றுவிட்டால், என் மதந்தான் உயர்வு என்று தீர்மானித்துவிட்டால் அது முட்டுச் சந்து. தேடித் தெரிந்து கொள்ள முடியாத நிலை. அடைபட்ட ஞான வாசல் – ஆனால் எல்லாம் அறிந்ததான அலட்டல் அங்கிருந்து தான் வரும்.
கடவுளை அறிந்தவருக்கு ஞானி என்று பெயர். ஒரு ஞானியே ஞானத்துக்கு வழிகாட்ட முடியும். அவர்தான் மிகச் சிறந்த குருவாக முடியும். சொற்களுக்கு அப்பால், ஹோமங்களுக்கு அப்பால், யோக சாதனைகளுக்கு அப்பால் பெரும் மௌனத்திற்கு உங்களைத் தள்ள முடியும்.
இந்த நூல் மௌன வாசலுக்கு உங்களை அழைத்துப் போகும் ஒரு குருவைப் பற்றியது. மௌனம் எளிதல்ல. குரு வழி எளிதல்ல. கடவுள் தேடல் சத்தியத்தோடு சேர்ந்தது என்பதை இந்த நூல் உணர்த்த முயற்சித்திருக்கிறது.
இந்த தேடலில் நீங்கள் தனி. குரு வழிகாட்டி. விழுந்து எழுந்து புரண்டு அடைய வேண்டிய அற்புதம் என்பதைச் சொல்வது.
சிவகாசியைச் சார்ந்த திரு.பார்த்தசாரதி அவர்களின் அமரகாவியம் என்கிற சிறிய புத்தகத்தைப் படித்து பரவசப்பட்டு அதிலிருந்த செய்திகளை எடுத்துக் கொண்டு அதற்கு என் வியப்புகளை விளக்கங்களை இந்நூலில் வெளியிட்டுருக்கிறேன்.
அதோடு என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர்களுடன் எனக்கேற்பட்ட அனுபவங்களை விலகி நின்று வேறு ஒரு கோணத்தில் ஆராய்ந்திருக்கிறேன்.
இது என் குரு யோகி ராம்சுரத் அவர்களை புகழ் பாடும் நூல். அதேசமயம் குறிவைத் தேடுவது என்பது ஒரு ஆனந்தம் என்பதை உங்களுக்கு உணர்த்தும் நூல்.
மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் இந்நூல் உருவாவதற்கு மிகவும் பக்கபலமாய் இருந்தது. 2012, பகவான் யோகிராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் இதை வெளியிட நேர்ந்திருக்கிறது.
எங்கள் எல்லா செயல்களுக்கும் துணை நிற்கும் எங்களை இயக்கம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு எங்கள் நன்றி. ஆன்மீக தளத்தில் அதாவது கடவுள் தேடலில் நாங்களும் முன்னேறி மற்றவரையும் உற்சாகப்படுத்துவது எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாயிற்று.
இதற்கும் அவரே காரணம். இந்நூலை திரும்பத் திரும்பப் படியுங்கள். சிறிது வெளிச்சம் வரும். பிறகு குருவின் அன்பு உங்களை அழைத்து செல்லும்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா.
என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன்.
Reviews
There are no reviews yet.