Description
திருமணமாகி தனிக்குடித்தனம் செய்ய வெளிதேசம் போகும் என் அன்பு மகள் சௌபாக்கியவதி ஸ்ரீ கௌரி கணேசனுக்கு இந்த நூல் அன்புப்பரிசு, ஆயிரம் கட்டி வராகன் எடையுள்ள திருமணச்சீர்…என்று எழுதிய கதை.
எது கண்டும் எப்போதும் அஞ்சாத கோபமொன்று சுப்ரமணியத்திடம் உண்டு.
சருமதிதான் பயப்படுவாள். “எதுக்கு இப்படிப் பிரச்னையைப் பெரிசு பண்றேள்.? கொஞ்சம் அமைதியா இருக்கக் கூடாதா?”
“எப்போ அமைதியா இருக்கணுமோ, அப்போ இருக்கணும். எப்போ கோபப்படணுமோ அப்போ கோபப்படணும். கோபப்படாமல் இருந்தால் முட்டாள்னு நினைச்சுடுவாங்க. சாருமதி பயப்படாத. பிரச்னையை என்கிட்டே விடு. இதனால அவமானம் வரலாம். அவமானத்த தாங்கறதுக்கு எனக்கு தெரியும். எப்படி அவமானப்படுத்தறதுன்னும் எனக்குத் தெரியும்.” தெளிவாக பிரச்னையில் குதிப்பார்.
அப்படி குதிப்பதற்கு சாருமதிக்கு தைரியம் வந்ததே இல்லை.
ஏன்? சுப்ரமணியத்தை கேள்வி கேட்பதற்கு இந்த வீட்டில் யாரும் இல்லை. ஆனால், தன்னைக் கேள்வி கேட்பதற்கு சுப்ரமணியம் இருக்கிறார். அப்படி சுப்ரமணியம் கேள்வி கேட்டால் அதுகுறித்து தெளிவாக பதில் சொல்ல சாருமதிக்கு என்றுமே தெரிந்தது இல்லை.
“என்ன இன்னிக்கு பட்டுப்புடவை கட்டிண்டு இருக்கற?”
“வெள்ளிக்கிழமை. அதனால கட்டிண்டிருக்கேன்.”
“வெள்ளிக்கிழமை அன்னிக்கு பட்டுபுடவைதான் கட்டிக்கணுமா?”
“அப்படி ஒன்னும் இல்ல. வெள்ளிக்கிழமை. அதனால பட்டுப்புடவை கட்டிண்டிருக்கேன்.”
“இல்லை சாருமதி. ஏன் வெள்ளிக்கிழமை பட்டுப்புடவை கட்டிக்கிற?”
“எல்லாரும் கட்டிக்கிறா. அதனால நானும் கட்டிக்கறேன்.”
“இப்படி இருக்காத சாருமதி. வெள்ளிக்கிழமை பட்டுப்புடவை கட்டிக்கிறதுக்கு ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடி. இன்னிக்கு நல்ல நாள். நான் பூஜை பண்ணப் போறேன். பட்டுப்புடவை கட்டிண்டு பூஜை பண்ணா நல்லது. இப்படி ஏதாவது சொல்லு. சும்மா அர்த்தமில்லாத ஒரு காரியம் பண்ணாத சாருமதி. நான் கேட்கறதுக்காக நீ பண்ண வேண்டாம். நீ கேள்வி கேட்டுக்கோ. நீயே பதில் சொல்லிக்கோ.
நாம பண்ற பல காரியங்கள் எந்த அர்த்தமும் இல்லாத இருக்கு. குறிப்பா உன்னை மாதிரி பொம்மனாட்டிங்க பண்ற பல காரியங்கள்ல நிறைய முட்டாள்தனம் கலந்துருக்கு. சரியான காரணம் வச்சுக்கிட்டு செய்யறபோது காரியமும் முழுசா, நிறைவா இருக்கும். சரியா செய்யணுங்கற நம்பிக்கையும் ஏற்படும். நீ எது கேட்டாலும் உளர்றதுக்கு என்ன காரணம் தெரியுமா? என்ன செய்யணும்னு தெரியாமலே செய்யறதுதான்.”
Reviews
There are no reviews yet.