Description
ஜீவ பூமி
மனிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூங்கி வழியும் மூளையானாலும் ஆபத்து நெருங்கியவுடன் உயிரால் அறைந்து எழுப்பப்பட்டுத் தன்னைத்தானே சாணை பிடித்துக்கொண்டு கூர்மையாகி விடுகிறது. மந்தபுத்திகளின் சுபாவமே இப்படியென்றால் ரதனின் தீட்சண்யமான புத்தியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
மதுவின் வேகத்தினால் ஏற்கனவே சூடேறிச் சிவந்திருந்த ரதனின் கண்கள், சேனாதிபதியின் உத்தரவுக்குப் பிறகு, உள்ளூர எழுந்த உக்கிரத்தால் இரண்டு நெருப்புப் பொறிகளைப் போல மாறி, ஒரு முறை கூடாரத்தைச் சுற்றி வளைத்துச் சுழன்றன. இடையிலிருந்த கச்சையை அவிழ்க்கப்போன அவன் கைகள் கச்சையிலேயே தங்கிவிட்டன. கைகளின் கட்டைவிரல்கள் இரண்டும் கச்சை மத்தியில் செருகப்பட்டிருந்த உடைவாளின் சொர்ணப் பிடியைத் தடவிக் கொடுத்தன. ஏதோ பெருத்த அபாயம் நேரிடும் சமயம் நெருங்கிவிட்டதென்பதை மோஹன்தாஸ் நன்றாகத் தெரிந்து கொண்டான். ரதனின் சலனமான நேத்திரங்களிலிருந்து அவன் புத்தி அந்தச் சமயம் துரிதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டதென்று மோஹன்தாஸுக்கு சந்தேகமற விளங்கிவிட்டது. ரதனின் கபோலத்தின் உச்சிகளில் பொறிகளை வளைத்துக்கொடுத்தாற்போல் புடைத்து ஓடிய நரம்புகளும் மோஹன்தாஸின் முடிவு சரியென்பதைத் தெள்ளென விளக்கின.
எந்த நிமிஷமும் கூடாரம் அமளி துமளிப் படலாமென்பதை உணர்ந்து கொண்ட மோஹன்தாஸ் ஜெய்ஸிங்கைப் பார்த்தான். ஜெய்ஸிங்குக்கும் நிலைமை புரிந்துதானிருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் அவன் என்ன செய்ய முடியும்? சேனாதிபதி ஒரு முறை இட்ட உத்தரவை மாற்றியறியாதவன். அவசரப்பட்டு நிலைமை தெரியாமல் உத்தரவிடுபவனும் அல்ல. எப்பொழுது துணிச்சலுடன் இவ்வாறு ரதனைச் சிறைசெய்யும்படி உத்தரவிட்டிருக்கிறானோ அப்பொழுதே அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு வேண்டிய முன்னேற்பாட்டுடனேயே அவன் வந்திருக்க வேண்டுமென்பதை ஜெய்ஸிங் நன்றாக அறிந்திருந்தான். அவன் நினைத்ததில் தவறில்லையென்பதை டைபர்கானின் அடுத்த வார்த்தைகள் நிரூபித்தன.
“ரதன்! தப்புவதற்கு மார்க்கம் எதுமிருப்பதாக நினைக்க வேண்டாம். எதிர்ப்பு எவ்விதப்பலனையும் அளிக்காது. நீயாகிலும் சரி, உன்னைச் சேர்ந்த இந்த ராஜபுத்திரர்களில் யாராகிலும் சரி, எந்தவிதமாக எதிர்ப்பைக் காட்டினாலும் உடனே இந்தக்கூடாரத்தைச் சூழ்ந்து இங்குள்ள அனைவரையும் எலும்புகூட அகப்படாமல் படுசூரணம் செய்து விடும்படி மொகலாய சைன்னியத்துக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இங்கு ஏதாவது ரகனை நடந்தால் உன்னுடைய ராஜபுத்திரப்பட்டாளம் உடனே உதவிக்கு வராதபடி அவற்றைச் சைன்னியத்தின் முகப்பில் நிற்கும்படி உத்தரவிட்டனுப்பிவிட்டேன். இந்தக் கூடாரத்திற்கும் உன் பட்டாளத்துக்கும் இடையே சுமார் ஐயாயிரம் மொகலாய வீரர்கள் இருக்கிறார்கள். ஆகவே, கண்மூடிக் கண் திறப்பதற்குள் காரியம் முடிந்து விடும், ஜாக்கிரதை!” என்று டைபர்கான் எச்சரித்துவிட்டு, “சிப்பாய்! அவனை என் கூடாரத்துக்குக் கொண்டுவா” என்று சொல்லிப் புறப்படச் சித்தமானான்.
டைபர்கான் தன் ஏற்பாடுகளைப் பற்றி விவரித்த விஷயங்கள் மற்றவர்கள் மனத்தில் எந்தவித உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டனவோ தெரியாது. ஆனால் ரதன் சந்தாவத்தின் மனத்தில் எந்தவித பயத்தையோ ஆயாசத்தையோ அவை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. புறப்படத் துவங்கிய சேனாதிபதியின் காலை உள்ளுக்கிழுக்க ரதன் ஒரு சந்தேகம் கேட்டான். “டைபர்கான்! கண்ணை மூடித்திறக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்?” என்றான்.
டைபர்கான் சற்றுத்திரும்பி ரதனை ஒருமுறை பார்த்தான். இத்தனை ஆபத்திலும் விளையாட்டாகப் பேசும் துணிச்சலான எதிரியைப் பார்த்து டைபர்கான் ஆச்சரியப்பட்டான்.
“அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன ரதன்?” என்று டைபர்கானும் சிறிது நகைச்சுவையைக் காட்டினான்
Reviews
There are no reviews yet.