Description
கவர்ந்த கண்கள்
அவன் ஏக்கத்தையும் பெருமூச்சையும் காணவே செய்தாள் அக்காரிகை. அதற்குக் காரணமும் புரிந்தது அவளுக்கு. தாசியென்றால் எல்லோருக்கும் இணங்குபவள் என்ற காரணத்தால், நினைப்பால், துணிவால், அவன் தன் வழியைத் தடுத்து நிற்கிறான் என்று தவறாகப் புரிந்து கொண்ட அவள் பணிப்பெண்ணை நோக்கி,”இவனை யாரும் ஏன் தொட முடியாது? தொட்டால் ஏன் பிழைக்க முடியாது? இவன் என்ன இந்த நாட்டு மன்னனா?” என்று வினவினாள். அவள் குரலில் அலட்சியமும் சினமும் விரவிக் கிடந்தன.
“ஆம் அம்மா” என்றாள் பணிப்பெண் சங்கடத்துடன்.
“என்னடி ஆம் அம்மா?” என்று கேட்டாள் ஹேமா, சிறிதும் தணியாத கோபம் துளிர்த்த குரலில்.
“ஒரு வகையில் இவரும் மன்னர்தான்” என்று பதில் சொன்னாள் பணிப் பெண்.
“ஒருவகையில் மன்னரா?” ஹேமாவின் கேள்வியில் வியப்பு இருந்தது.
“ஆம்.”
“அது எந்த வகை?”
“மல்லர்களின் மன்னர், இந்நாட்டு ராஜமல்லர்.” இதைச் சொன்ன பணிப்பெண்ணின் குரலில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக ஒலித்தன. அத்துடன் நிற்கவில்லை பணிப்பெண். இவர் பெயர் தனுர்தாஸர். தமிழில் வில்லிதாஸர் என்றும் அழைக்கிறார்கள்” என்றும் சொன்னாள்.
அப்பொழுதுதான் புரிந்தது ஹேமாவுக்கு. அரசரால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், பெயரைக் கேட்ட மாத்திரத்தில் யாரும் நடுங்கக்கூடிய பிரக்யாதி உடையவருமான ராஜ மல்லாதான் தன்னெதிரே நிற்கும் அந்த வாலிபன் என்று. இருப்பினும் அவள் இதயத்தில் மட்டும் எந்தவித அச்சமும் எழவில்லை.”இவருக்கு இரட்டைப் பெயரா? என்று இகழ்ச்சியுடன் கேட்டாள் பணிப்பெண்ணை.
“ஆம் அம்மா” என்றாள் பணிப்பெண்.
“வட மொழியிலிருந்து தமிழ்மொழி. மொழி பெயர்ப்புப் பெயரா?” என்று மீண்டும் இகழ்ச்சியுடன் கேட்டாள் ஹேமா.
ஆமாம். தங்களைப் போலத்தான். தங்களை ஹேமாம்பாள் என்றும் பொன்னாச்சியென்றும் மக்கள் அழைக்கவில்லையா?” என்று வினவிய பணிப்பெண் நகைத்தாள்.
அதுவரை எதிரே கல்லுப்பிள்ளையார் மாதிரி நின்று கொண்டிருந்த வில்லிதாஸனும் கலகலவென நகைத்தான்.”நம்மிருவருக்கும் நல்ல பொருத்தமிருக்கிறது, பெண்ணே” என்று கூறவும் செய்த வில்லி தாஸன் திடீரென சுற்று முற்றும் நோக்கினான். நீண்ட நேரம் அவளைப் படியில் நிறுத்திவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான் அவன். தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கண்ட சில காவலாட்கள் கீழே வீதியில் செல்வதை நிறுத்திவிட்டதையும், காவிரியிலிருந்து குடிநீர் கொண்டு வந்திருந்த ஓரிரு அரண்மனைப் பணிப்பெண்களும் எட்ட நின்று தங்களைக் கவனித்துக் கொண்டிருந்ததையும் பார்த்த தனுர்தாஸன்,”பெண்ணே,மன்னிக்க வேண்டும். நீ போய் வா” என்று வழிவிட்டு நின்றான்.
ஹேமா உடனடியாக நகரவில்லை. படிகளுக்குக் கீழே அந்தப்புரத்தையும் அரசரின் தனி மாளிகையையும் இணைத்து ஓடிய பாதையை அவளும் கவனித்தாள். வில்லிதாஸன் நோக்கியதும் அச்சத்தால் விரைந்துவிட்ட காவலரையும், தலை குனிந்து நடந்துவிட்ட குடமேந்திய மாதரையும் பார்த்தாள். அவன் ஒரே பார்வையில் சிதறிவிட்ட காவலரையும் பணி மக்களையும் கண்ட அவள், வில்லிதாஸன் செல்வாக்கு மிதமிஞ்சியது, பார்வை பல முள்ளது என்பதை உணர்ந்தாள்.
அந்தச் சமயத்தில் அவள் கண்களையும் நோக்கினான் தனுர்தாஸன். தனுசைப்போல் வளைந்த புருவங்களுக்குக் கீழே மென்மையுடனும் சலனத்துடனும் நோக்கிய இரு அரவிந்த விழிகள் தனது கண்களுக்குள் புகுந்து மனத்தில் தைத்து விட்டதை உணர்ந்தான். அந்தச் சமயத்தில் ஆண்டாளின் இணையற்ற, எந்த இலக்கியத்திலும் காணாத உவமை அவன் மனத்துள் எழுந்தது.”ஆண்டாள் ஒரே கூட்டுச் சொல்லில் இரண்டு உவமைகளைச் சொன்னாளே, போதரிக் கண்ணினாய் என்று, போது என்றால் புஷ்பம் அரி என்றால் மான். புஷ்பம் போல் மென்மையாகவும் மானைப்போல் மருட்சியும் கொண்ட கண்கள் என்பது எத்தனைச் சிறப்பு! இப்படி எந்தக் கவி உவமை சொன்னான்? மென்மையும் மருட்சியும் கலந்தால் தானே பெண்கள் கண்ணுக்கு அழகு?’ என்று பலபடி மனத்துக்குள் சிந்தித்தான் மீண்டும் ஒருமுறை அவள் கண்களை நோக்கினான். அப்பொழுது அவற்றில் சீற்றம் மறைந்திருந்தது. அதன் இடத்தை மென்மையும் மருட்சியும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. சலனப்பட்ட பார்வை மென்மையடைந்து நாணத்தை வீசிய கண்கள் நிலத்தை நோக்கின. அடுத்த விநாடி காலிற் சிலம்பு கொஞ்ச, கைவளை குலுங்க, எழில்கள் அளவுடன் அசையப் படிகளில் அவள் வேகமாக இறங்கிச் சென்றுவிட்டாள் பணிப்பெண் தொடர.
அவள் போவதை வில்லிதாஸன் பார்க்கவில்லை. சிந்தனை அவன் மனத்தை ஊடுருவி நின்றது. இனி அவளைப் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தான். அந்த உறுதியுடன் படிகளில் இறங்கிச் சிந்தாமணியிலிருந்த தனது வீட்டை நோக்கிச் சென்றான். அவன் உறுதியைக் குலைக்க விதி மறுநாளே விளையாடியது.
Reviews
There are no reviews yet.