Description
மலைவாசல்
வில்லையும் அம்பையும் ஈட்டியையும் ஏந்தி, நின்ற அத்தனை வீரர்களில் ஒருவனுக்குக்கூட அடிலனை எதிர்த்துப் பேசத் தைரியமில்லை. அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நல்ல அபிப்ராயத்தையும் இழந்த அஜித் சந்திரன் ஒரு மூலையில் நின்று என்ன நடக்கிறதென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
காமினி பயத்துடன் வண்டியிலிருந்து இறங்கி அடிலனிடம் தயங்கித் தயங்கிச் சென்றாள். தன் காலடியில் நின்ற காமினியை அடிலன் உற்றுப் பார்த்தான். இடது கையால் குதிரை லகானைப் பிடித்தவண்ணம் வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி ஆராய்ந்தான். குற்றமற்ற அந்த முகத் தாமரையில் லயித்த அடிலன் கண்களில் கூடக் காமவெறி ஒரு விநாடி அகன்றது. “உன் பெயரென்ன?” என்றான் அடிலன்.
“காமினி.”
“உன் அழகுக்குத் தகுந்த பெயர்” என்று சொல்லி மாப்பிள்ளை பல்தேவைப் பார்த்தான்.
பல்தேவ் மீண்டும் தன் வாயைத் திறந்து அடிலன் கோபத்தைக் கிளறினான். “மகராஜ்! அவளை ஒன்றும் செய்ய வேண்டாம். இன்றுதான் எங்களுக்குக் கலியாணமாயிற்று” என்று அடிலன் காலைப் பிடித்துக் கொண்டான். காலை மீண்டும் பிடித்த கையைச் சாட்டைப் பிடியால் அடித்து விலக்கிய அடிலன், “மடையா! உன் மனைவியை யார் என்ன செய்து விட்டார்கள்? நான் அவளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கையில்…” என்று சொல்லிக் கொண்டு போகையில் மாப்பிள்ளை குறுக்கே பாய்ந்து, “மகராஜ்! நீங்கள் பேசுவதோடு நிற்கவில்லை,தொடுகிறீர்களே” என்றான்.
அடிலன் கோபம் எல்லை மீறிவிட்டது. “டேய்! நான் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று தீர்ப்புச் செய்ய உனக்கு என்ன துணிச்சல்? அடிலனை யாரென்று நினைத்தாய்?” என்று கர்ஜித்துத் தன் வீரர்களைப் பார்த்து, “இந்தப் பெண்ணை அரண்மனைக்குக் கொண்டு வாருங்கள்” என்று உத்தரவிட்டு லகானை இழுத்துக் குதிரையை நகர விட்டான்.
உதயனும் பல்தேவும், “மகராஜ்” என்று கதறினார்கள். கூட்டத்தினர் திக்பிரமை பிடித்து நின்றார்கள். அடிலன் வீரர்களில் இருவர் காமினியைப் பிடிக்க நெருங்கினார்கள். “ஐயோ! என்னிடம் வராதீர்கள்” என்று காமினி கூச்சலிட்டாள். அந்த சமயத்தில் அருகே வந்த வீரன் ஒருவனும், “ஐயோ” என்று கூச்சலிட்டுத் தரையில் சாய்ந்தான். அவன் கழுத்தில் வில்லவரின் விஷந் தீட்டிய அம்பு பாய்ந்திருந்தது. இந்தத் துணிகரச் செயலை யார் செய்திருப்பார்கள் என்று அம்பு வந்த திக்கை நோக்கினான் உதயன். ஓர் அம்பு செலவழிந்து விடவே இரண்டாவது அம்பை வில்லில் மாட்டி நாணை இழுத்துக் காமினியை அணுகிக் கொண்டிருந்த இரண்டாவது வீரனுக்காகக் குறி வைத்துக் கொண்டிருந்தான் அஜித் சந்திரன்.
காமினியை நெருங்கிய இரண்டாவது வீரன் பயந்து குதிரையைத் திருப்பிக்கொண்டு ஓடிவிட்டான். ஆனால், அஜித் சந்திரன் வெற்றி ஒரு விநாடிதான் நிலைத்தது. அடுத்த நிமிஷம் சுமார் இருபது குதிரை வீரர்கள் தடதடவென ஊர்வலத்தில் புகுந்தார்கள். அவர்களுக்குத் தலைமை வகித்து அடிலனே வந்தான். “யாரவன் அம்பு எய்தவன்?” என்று விசாரித்தான் அடிலன்.
“நான்தான்!”
ஊர்வலத்தின் கோடியிலிருந்து வந்த சப்தத்தை நோக்கி கண்களைச் செலுத்திய அடிலன் கோபம் பன்மடங்கு அதிக மாயிற்று. “யார்… உபாத்தியாயனா? உனக்கு உயிர் வெறுத்து விட்டதா?”
“இல்லை; மானம் பெருத்துவிட்டது அடிலா! இன்னோர் அம்பும் தயாராயிருக்கிறது. இந்தா, இத்துடன் உன் அக்கிரமம் உலகத்திலிருந்து ஒழியட்டும்,” என்று சொல்லி அம்பை எய்தான்.
பல யுத்தங்களில் பயின்றுள்ள அடிலன் குதிரையைத் தட்டிப் பாய வைத்து அதன் உடலில் அம்பைத் தைக்கச் செய்து, குதிரை விழுமுன் லாகவமாக அப்புறம் குதித்தான். உடனே இடிபோன்ற குரலில் கட்டளையிட ஆரம்பித்தான். “இந்த அடிமைகளை அடித்து விரட்டுங்கள். அந்தச் சிறுக்கி யையும் உபாத்தியாயனையும் பிடித்து வாருங்கள். இங்கு எவனாவது அரை விநாடி நின்றால் ஒழித்துக் கட்டுங்கள்” என்றான். –
அடுத்த விநாடி ஊர்வலம் அமளிப்பட்டது. குதிரை வீரர்கள் பாதசாரிகளான வில்லவர்மேல் பாய்ந்தார்கள். இரு வீரர்கள் காமினியைக் கரகரவென்று இழுத்துச் சென்றார்கள். உபாத்தியாயன் எதையும் சட்டை செய்யாமல் மீண்டும் ஓர் அம்பை வில்லில் பொருத்தினான். நாணை இழுக்குமுன் பிரம்மாண்டமான ஒரு குதிரை அவன் தலை மேல் பாய்ந்தது. ஈட்டியின் நுனி ஒன்று தலையில் பலமாகத் தாக்கியது. அஜித் சந்திரனுக்கு உலகமே இருட்டிவிட்டது போல் தோன்றியது. ஸ்மரணை எங்கோ பறந்துவிட்டது.
Reviews
There are no reviews yet.