Description
மஞ்சள் ஆறு
சதுர்ப்புஜன் கோயில் பகுதிக்குப் போவதற்கே தனக்கு உத்தரவு இல்லையென்பதை தபஸ்வினியின் வார்த்தைகளால் சந்தேகமறப் புறிந்துகொண்ட ஸங்கன் துக்கம் புரண்டோடிய உள்ளத்துடன் தபஸ்வினியுடன் விடைபெற்றுக்கொண்டு, சாருணீதேவியின் ஆலயத்தை விட்டு வெளியே வந்து, புரவிமீதேறிக்கொண்டு மலைச் சரிவின் பாதையில் இறங்கினான். பாதையில் இறங்கிய சமயத்திலும் ஸங்கனின் எண்ணங்கள் காயமுற்று ஆலயத்தில் கிடந்த தன் தம்பியையும் மாமனையும் வளைய வந்து கொண்டிருந்ததால் மலையடிவாரத்துக்கு வந்த பின்புகூட அவன் எண்ணங்களில் சிறிதும் மாறுதல் ஏற்படவில்லையாகையால், ‘ஏன், சதுர்ப்புஜன் கோயிலுக்குப் போனால்தான் என்ன?’ என்று நினைத்தான் ஸங்கன். அவன் ஒற்றைக்கண், மஞ்சளாற்றுக்குச் செல்ல வேண்டிய பாதையிலிருந்து சற்று விலகி, தூரத்தேயிருந்த தோப்பு ஒன்றைக் கவனித்தது ‘அந்தத் தோப்பு கால் காதத்துக்கு மேலிருக்கும். அதையடுத்துத் தானே இருக்கிறது சதுர்ப்புஜன் கோயில்? அங்கு போய்க் கோயிலதிகாரிகளிடம் சொன்னாலே ஆளனுப்புவார்கள். நான் கிராமத்துக்குக்கூடப் போக வேண்டிய அவசியமில்லையே’ என்று மீண்டும் மீண்டும் நினைத்த னங்கன், சாருணீ தேவியை ஒரு முறை மனத்தில் தியானித்து, “மன்னிக்கவேண்டும், தாயே, மரணகாயத்திலிருக்கும் இருவருக்கும் உடனடியாக உதவியனுப்பாமல் என்னால் மஞ்சள் ஆற்றுக்குச் செல்ல முடியவில்லை” என்று கூறிக்கொண்டு, புரவியைத் தோப்பின் பாதையை நோக்கித் திருப்பினான்.
நிர்மானுஷ்யமான பாலைவனப் பாதையில் சிறிது நேரமும் தோப்புப்பகுதியில் சிறிது நேரமும் பயணம் செய்த ஸங்கன், இருட்டு நன்றாக ஏறி மையென வையகத்தைக் கவிந்துகொண்ட சமயத்தில் சதுர்ப்புஜன் கோயிலை அடைந்தான். தோப்பின் தென்புற முகப்பிலிருந்த சதுர்ப்புஜன் கோயிலில் அப்பொழுது முதல் ஜாம பூஜை நடந்து கொண்டிருந்தது. ஊரை விட்டுத் தள்ளிய தோப்பிலிருந்த காரணத்தால் கூட்டம் ஏதுமில்லாத அந்தக் கோயிலுக்குள் சென்ற ஸங்கன், அர்ச்சகர்களில் ஒருவர் சதுர்ப்புஜனுக்குப் பூஜை செய்து கொண்டிருப்பதையும் மற்றொருவர் கோயிலின் பெரு மணியைக் கையிலெடுத்து அடிக்கத் தொடங்கி விட்டதையும் கண்டு கர்ப்பக்கிரகத்தின் முகப்பிலேயே நின்று! தலை வணங்கினான்.
ஏதும் பேசாமல் பின்புறத்தில் நின்று தலைவணங்கியதால் ஸங்கன் வந்திருப்பதை அறியாத அர்ச்சகர்கள் தங்கள் கடமையிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்தனர். ஸங்கனும் சதுர்ப்புஜனின் கடலிலும் பெரிய கண்களின் கருணை வெள்ளத்தில் அழுந்தி, அந்த அழகிய மூர்த்தியையே பார்த்துக்கொண்டு நின்றான். விஷ்ணுவின் ஆயிர நாமங்களையும் பக்தியுடன் சொல்லி அர்ச்சனை செய்துகொண்டிருந்த அர்ச்சகர் பயகிருத் பயநாசன்:” என்ற இடத்திற்கு வந்ததும் சிறிது புன்முறுவல் செய்த ஸங்கன், சதுர்ப்புஜனை மனத்தால் வணங்கி, “பிரபு. ‘பயகிருத்: அதாவது பயத்தைத் தருபவனும் நீ பயநாசன்: பயத்தை நாசம் செய்பவனும் நீ’ என்று மந்திரம் சொல்லுகிறதே. என் விஷயத்தில் உன் கிருபை எப்படி? பயத்தைக் கொடுக்கிறாயா, பயத்தை நிவாத்திக்கப் போகிறாயா? உன் ஆலயப்புறம் வந்தால் எனக்கு ஆபத்து உண்டு. பயம் உண்டு என்று தபஸ்வினி சொன்னாளே, அதை உண்மையாக்கப் போகிறாயா?” என்று கேட்டான்.
நிரந்தரமாகச் செதுக்கப்பட்டிருந்த போதிலும் சதுர்ப்புஜன் விக்ரகம் புதிதாகத் தன்னை நோக்கி மந்த காசம் செய்வது போல தோன்றியது ஸங்கனுக்கு. அந்த மந்தகாசத்துக்குக் காரணம் என்னவென்று தெரியாமற்போனாலும் அர்ச்சனையில் மனத்தைப் பதிய வைத்தான் ஸங்கன், அவன் மனம் பயத்தை உதறியது, ஆபத்தை நினைப்பதை அறவே தவிர்த்தது. தாயான ஜாலி வம்சத்து ராணியால் குழந்தை முதல் பக்தி மார்க்கத்தில் பழக்கப்பட்டிருந்த ஸங்கன், மௌனமாய் ஆண்டவ னெதிரே நின்று ஸஹஸ்ர நாமங்களையும் காதால் பருகிக் கொண்டிருந்தான். அர்ச்சனை முடிந்ததும் திரும்பிய அர்ச்சகர், எதிரே ஸங்கன் நின்றதைக் கண்டு பிரமித்தார். மணியடித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் திடீரென மணியை நிறுத்தி, இளவரசரைக் கவனிக்கவில்லை…” என்று சமாதானம் சொல்ல முயன்றார்.
“அரசர்க்கரசனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தீர்கள். அப்போது மாநில மன்னர் குலத்தாரைக் கவனிப்பதும் தவறு. ஆண்டவன் பூஜையில் திளைப்பது தான் நியாயம். தீர்த்தம் கொடுங்கள்; துளசி கொடுங்கள்” என்று ஸங்கன் கையை நீட்டினான். தீர்த்த கிண்ணத்தை அர்ச்சகர் கையிலேந்தினார். அதிலிருந்து ஓர் உத்திரணியில் தீர்த்தத்தை மொண்டு எடுத்தார். ஆனால், அந்தத் தீர்த்தம் நீட்டிக்கிடந்த ஸங்கன் கைகளில் விழவில்லை, ஏந்திய உத்திரணி ஏந்தியபடியே நின்றது. அர்ச்சகரின் கண்கள் வாயிற்படியை வெறுத்து நோக்கின. அதில் மிதமிஞ்சிய பயம் தாண்டவமாடியது.
Reviews
There are no reviews yet.