Description
மோகினி வனம்
மகாராணி அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தாள். அவள் கிடந்த இடத்தில் சென்று அவள் ஆடையையும் ஆராய்ந்தாள். இடைக்குக் கீழே இருந்த ஆடையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அதை யாரோ புரட்டி சாமர்த்திய மாகக் கிழிசல் தெரியாமலும் அந்தப் பெண்ணின் உள்ளழகு தெரியாமலும் மறைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட ராஜமாதா, அந்த மனிதன் தீப்சந்தாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தாள். ராஜமாதா அந்தப் பெண்ணின் அருகில் உட்கார்ந்து தலையின் குழலைப் பிரித்து சோதித்தாள்.
அத்தனை அடர்த்தியான கரிய குழலைக் கண்டு ராஜமாதா சிறிது பொறாமைகூட கொண்டாள். ஆனால் அந்தக் குழலுக்கு இடையில் கசிந்திருந்த ரத்தக் கரையைக் கண்டதும் சினத்தின் பிம்பமாகத் திகழ்ந்தாள், “ தீப்சந்த்! இந்த அக்கிரமத்தைச் செய்தவர்கள் யார்? எங்கு இந்தச் சம்பவம் நடந்தது?” என்று வினவினாள்.
“அந்த இழிச்செயலில் வேறு யார் இறங்குவார்கள்? ராணாவின் வீரர்கள் தான்.” என்றான் தீப்சந்த் சினம் குரலில் துலங்க.
“யார் சந்தாவதர்களா, சக்தாவதர்களா!” என்று ராம்பியாரி வினவினாள்.
“சந்தாவதர்கள் தான். ராணாவின் மெய்க்காவலர்கள்” என்றான் தீப்சந்த். –
மகாராணி பிரமை பிடித்து நின்றாள். சந்தாவதர்களை விசாரிக்கும் திறன் தனக்கோ தன் மகனுக்கோ இல்லாததை உணர்ந்தாள். மகன் அரியணையைக் காத்து நிற்கும் சந்தாவதர்களில் யாரைத் தொட்டாலும் விபரீதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்ட மகாராணி பேசவும் முடியாமல் திகைத்தாள்.
தீப்சந்த் அவள் சிந்தனையைக் கண்டான்; முகத்தில் ஏற்பட்ட மருட்சியைக் கண்டான்; ராணாவின் முகத்தில் விரிந்த கிலியையும் கண்டான்; சோம்ஜியின் முகத்தில் விளைந்த பிணக்குகளையும் கண்டான். அந்த இடத்தில் இந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்காது என்ற முடிவுக்கும் வந்து, “மகாராணி! மொகலாயர்கள் தான் பெண்களைத் தூக்கிச் செல்லும் பழக்கமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது ராஜபுத்திரர் பண்பாடும் அந்த லட்சணத்துக்கு வந்திருக்கிறது. நீதிக்கும் வீரத்துக்கும் பெயர்போன மேவாரில் இரண்டுக்கும் இடமில்லை போலிருக்கிறது. சரி நான் வருகிறேன்” என்று கூறி விட்டுக் கீழே கிடந்த பெண்ணை எடுக்க முயன்றான்.
அப்பொழுது ஒலித்தது ராஜமாதாவின் குரல், “நில் தீப்சந்த்” என்று.
பெண்ணை எடுக்கக் குனிந்த தீப்சந்த் எழுந்து நின்று ராஜமாதாவை ஏறிட்டு நோக்கினான். “மகாராணி! என்ன சொல்கிறீர்கள்? நியாயம் வழங்கப்போகிறீர்களா?” என்று வினவினான்.
மேவாரில் நியாயமில்லையென்று யார் சொன்னது?” என்று ராஜ தோரணையில் பேசிய ராஜமாதா, “இவளைப் பிடிக்க முயன்றவர்களை உன்னால் காட்ட முடியுமா?” என்று வினவினாள்.
“இருவரைக் காட்ட முடியும்” என்றான் தீப்சந்த்.
“மொத்தம் எத்தனை பேர்?”
“நான்கு பேர்.”
“மற்றவர்கள்?”
“இருவரை நான் கொன்றுவிட்டேன். மற்ற இருவரைக் கொல்ல முடியவில்லை.”
“ஏன்?”
“ஓடி விட்டார்கள்.”
இதைக் கேட்ட ராஜமாதா சினத்தின் வசப்பட்டு, “அவர்களை யார் உன்னைத் தப்பவிடச் சொன்னது?” என்று சீறினாள்.
“புரவியிலிருந்து மயக்கமாகிச் சரிந்துவிட்ட இந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டியதாயிருந்தது…” என்றான் தீப்சந்த்.
ராஜமாதாவின் முகத்தில் கவலை விரிந்தது. “தீப்சந்த் முட்டாள்! உன்னிடமிருந்து தப்பிய இருவரும் சந்தாவதர்களின் தலைவரிடம் விஷயத்தைச் சொல்லியிருப்பார்கள். சந்தாவதர்களின் தலைவர் சலூம்பிரா தமது வீரர்களுக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவர். இந்தப் பெண்ணை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ ஓடிவிடு” என்று கூறினாள்.
தீப்சந்த் மகாராணியை வெறுப்புடன் நோக்கினான், “மகாராணி! உங்கள் யோசனையை மானமுள்ள எந்த ராஜபுத்திரனும் ஏற்கமாட்டான். அதுவும் தீப்சந்த் ஓடுவதா!” என்று கூறி நகைத்தான்.
மகாராணியின் முகத்தில் திகில் விரிந்தது. “இவளைத் தூக்கிச் செல்ல முயன்ற நிகழ்ச்சி நடந்த இடம் எது?” என்று வினவினாள்.
“மோகினி வனம்” என்றான் தீப்சந்த்.
“அங்கு இருப்பது சலூம்பிராவின் தம்பி அல்லவா!” என்று வினவினாள் ராம்பியாரி.
“கவலைப்படாதீர்கள். நான் கொன்ற இருவரில் அவனும் ஒருவன்” என்றான் தீப்சந்த்.
“தீப்சந்த்! சொல்வதைக் கேள். உதயபூரை விட்டு ஓடிவிடு. சலூம்பிரா தனது தம்பியின் மரணத்துக்குப் பழிதீர்க்காமல் உறங்கமாட்டார்” என்றாள் ராஜமாதா…
“நன்று சொன்னீர்கள் மகாராணி” என்று கூறிக் கொண்டே உருவிப் பிடித்த வாளுடன் சலூம்பிராஉள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னால் நான்கு வீரர்களும் உருவிய வாட்களுடன் உள்ளே நுழைந்தார்கள்.
Reviews
There are no reviews yet.