Description
தன்னுடைய இருபதாண்டுகாலப் புழுக்கத்தை அருகிலிருந்து பார்த்தும் வயசுக்கு வந்த
பெண்ணொருத்திக்கு எதுவுமே விளங்கவில்லையா? எல்லாவற்றையும் தான் அப்படிச்
சுருக்கி ஒளித்துவைத்து வாழ்ந்துவிட்டதால் நடந்த கேடா இது? அல்லது அவளுக்கு
அத்தனை விதரணை போதவில்லையா? ஒரு நல்ல பிரியத்திற்கு உண்டான பிறப்பாக
இருந்திருந்தால் இதெல்லாம் புரிந்திருக்குமோ? வெறும் உடல் மேய்ச்சலின்
எச்சப்பிறவிகள்தானே தான் பெற்றுக்கொண்டவை? அந்த வாழ்வில் பிரியம் எங்கிருந்தது?
காதல் எங்கிருந்தது? வெளிச்சத்தில் விலகியும் இருட்டில் நசுக்கியும் கிடந்த மிருக
வாழ்விலிருந்து இந்தப் பிள்ளை எதையுமே அவலமாகக் கண்டுவிடவில்லையா?
புருசனின் கண்ணில் தெரியும் குற்றவுணர்ச்சியும் பயமும் சமயங்களிலான பரிவும் ஒரு
குழந்தைமீது காட்டுவதைப் போன்றதொரு கரிசனமுமாகவே அந்த தாம்பத்தியம்
நிகழ்ந்திருக்கிறது. உடல் அரிப்புகளால் காலங்காலமாக காய்ந்துபோய், காமக்கசடுகள்
மூர்க்கக்குவியலாக ஏறிப்போயிருக்கும் வேட்டை நாய் அவன்; பசியெடுக்கும்போது மட்டும்,
வாகாகக் கிடைத்த நலிந்த உடலைப் புசிப்பதற்காகத் தன் கோரப்பற்களை வெளியே
காட்டும் நாய். காலையில் குழந்தையாகப் பார்த்து தலை குனிகிறாய்; கண்ணெடுத்துப்
பார்க்கத் தயங்குகிறாய்; மறு வார்த்தை பேசாத யோக்கிய வேஷம் தரிக்கிறாய்; வியர்வை
நெடியடிக்கும் நெருக்கத்தில் கண்களை மூடிக்கொண்டு அவளை வன்புணர்கிறாய்.
அவளுக்கு வலித்ததா? அவளுக்குப் பிடித்ததா? அவள் வெறுமனே உன் வலிமைக்கு
இணங்கினாளா? எங்கேனும் லயித்தாளா? உன் பாய்ச்சலை ரசித்தாளா? அவளுக்கு மூச்சு
முட்டியதா? நடுவில் செத்துக்கித்துப் போய்விட்டாளா?//
Reviews
There are no reviews yet.