Description
ஒரு மொழியைப் பேசுவோனின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் பின்னணியில் அறிவியல் முறைகளைப் பின்பற்றி விவரிப்பது மொழியியல். முதலில் உருவானது அமைப்பு மொழியியல். இது மொழியின் தரவுகளைக் கொண்டு இலக்கணத்தை விவரிக்கிறது.
இதற்கு மாற்றாக, பேசுவோரின் மனம் மொழியின் தரவுகளை அலசுகிறது என்பதன் அடிப்படையில் ஆக்கமுறை இலக்கணம் என்னும் புதிய கோட்பாட்டை முன்வைத்தார் நோம் சோம்ஸ்கி. ஒரு மொழியின் இலக்கண வடிவத்தைத் தீர்மானிக்கும் கொள்கை, மனித உடலின் பிற உயிரியல் வளர்ச்சிகள் போல, மனித மனத்தில் தீர்மானிக்கப்படுகிறது; இந்தத் திறன் மரபணு வழியாக அடுத்த தலைமுறைக்குப் போகிறது என்கிறார் சோம்ஸ்கி. எல்லா மனிதர்களும் தங்களுடைய சமூகப் பண்பாட்டு வேறுபாடுகளைக் கடந்து, ஒரே அடிப்படை இலக்கண வடிவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என வாதிடுகிறார் அவர். மொழிகளின் இலக்கணங்களிடையே உள்ள வேறுபாடுகள் இந்த அடிப்படை இலக்கணத்திலிருந்தே உருவாகின்றன; மனித மொழி பிற உயிரினங்களின் நடத்தை சார்ந்த தகவல் தொடர்பு வடிவங்களிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகிறார்.
நூலாசிரியர் கி. அரங்கன் இந்த நூலில், சோம்ஸ்கிக்கு முன்னிருந்த மொழியியல் கோட்பாடுகளையும் அவரால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கமுறை இலக்கணக் கோட்பாடு மொழியியலில் ஏற்படுத்திய தாக்கத்தையும் விளக்குகிறார். சோம்ஸ்கியின் கோட்பாடு புலனறி உளவியலின் பகுதியாக எப்படி வளர்ந்தது? அது மொழிப் பொதுமைகளை எவ்வாறு கண்டுபிடிக்க முற்பட்டது? போன்ற கேள்விகளுக்கு சோம்ஸ்கியின் கொள்கைப் பலத்தில் விடையளிக்கிறார் நூலாசிரியர்.
மேலும் இந்தப் புத்தகம் ஆக்கமுறை இலக்கணக் கோட்பாடு உளவியலிலும் தத்துவத்திலும் ஏற்படுத்திய தாக்கங்களைத் தனித்தனி இயல்களில் விளக்குகிறது. இறுதி இயல் சோம்ஸ்கியின் அரசியல் விமர்சனத்தைப் பற்றிப் பேசுகிறது. இது மனித மனம் இயற்கையில் மனித உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடும் இயல்புடையது என்னும் சோம்ஸ்கியினுடைய கோட்பாட்டை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது.
இலக்கணம், மனித உரிமை போன்றவற்றில் ஆர்வமுடையவர்கள் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம்
Reviews
There are no reviews yet.