Description
முதல் பாகம் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற வார்த்தைகளை மெய்பிக்கிறது இந்த ராஜமுத்திரை வரலாற்று நாவல். பாண்டிய இளவரசன் வீரபாண்டியனின் புத்திசாதூரியத்தைப் போற்றிக் கொண்டாடும் கதையாகத் திகழ்கிறது இப்புதினம். பாண்டிய நாட்டின் பொக்கிஷமாகவும் பெரும் செல்வத்தை சேர்க்க காரணியாகவும் இருக்கும் முத்துக்கள் களவாடப்படுகிறது.அக்களவை கண்டறிய தன் தம்பியான வீரபாண்டியனை கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவர். பாண்டிய நாட்டின் இரண்டாம் தலைநகரமாக இளவரசர்களின் ஆட்சியில் இருந்த கொற்கை மண்மூடிய பிறகு வெறும் வியபாரத் தளமாக மாறிவிடுகிறது. நாட்டின் சிறந்த முத்துக்கள் எல்லாம் அரசாங்க கஜானாவிற்கு வர வேண்டும் என்ற உத்தரவு நிறைவேறாமல் முத்துக்கள் காணாமல் போவதற்குப் பின்னே ஏதோ ஒரு சதி நடப்பதை உணர்ந்த மன்னன் தன் மகளையும் தம்பியையும் வணிகர்கள் மாதிரி கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார். பெருமுத்துக்களை எல்லாம் களவாடிய சேரமன்னன் வீரரவி அதனோட நிற்காமல் கொற்கையின் கோட்டையையும் தன் வசமாக்க கொற்கையிலே இருப்பதை அறிந்த கொண்ட வீரபாண்டியன் அவர்களை வளைத்து பிடித்து விட முயன்றாலும் தப்பித்துப் போனவர்கள் பாண்டிய மன்னன் மகளான முத்துக்குமரியை கடத்தியும் சென்றுவிடுகின்றனர். கொற்கை கோட்டை அதிகாரியின் மகளான இளநங்கையிடம் காதலில் வீழ்ந்து போன வீரபாண்டியன் அவளையே தனக்கு உபதளபதியாக நியமித்து சேரனுடன் போர் தொடுக்கும் முடிவை எடுக்கிறான். சேரனிடம் இருக்கும் ஆட்பலத்தை விடத் தங்களிடம் குறைவே என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டங்களை வகுக்கும் வீரபாண்டியன் முதலில் கோட்டாற்றுக் கரைக் கோட்டையை சேரர்களிடமிருந்து கைப்பற்றுகிறான். பாண்டிய வீரர்களுடன் வீரராகப் புகுந்து ஒற்று வேலையைப் பார்த்து பாண்டிய மகளைக் கடத்திய போசளர் படைத்தலைவனான சிங்கணனை பிடித்த வீரபாண்டியன் அவனைக் கொண்டே சேர மன்னன் வீரரவியுடன் போர் புரிய ஆயத்த வேலை செய்கிறார். கோட்டாற்றுக் கரைக் கோட்டையைப் பிடிக்கும் திட்டங்கள் நுணுக்கமாகவும் அதில் இருக்கும் குறைகளால் ஏற்பட்ட சறுக்குகளைச் சாமர்த்தியமாக வீரபாண்டியன் சரிசெய்வதையும் தன் மனம் விரும்பிய இளநங்கையை அக்கோட்டையிலே காந்தர்வ மணம் புரிந்து இரண்டுநாள் அவளுடன் வாழ்ந்த பிறகு சாவின் வாசலை தொட்டவனை அம்மனைவி மீட்டெடுக்கும் விதத்தையையும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது இம்முதல் பாகத்தில். சிங்கணனை கொண்டு சேரனை பிடிக்க வீரபாண்டியன் போட்ட திட்டத்தில் இருக்கும் சிறு ஓட்டைகளைக் கொண்டு சிங்கணன் வீரபாண்டியனையே அழிக்க செய்யும் திட்டத்தை அவனுடன் இருந்து பார்த்தது போல புரிந்து கொண்டு தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் இளவரசனின் ஆளுமையை உலகிற்குப் பறைசாற்றுவது போல் தன் மொத்த நடவடிக்கையையும் எவரும் அறியாமல் பெரும் சேர படையை வெற்றிக் கொள்கிறான் வீரபாண்டியன். இரண்டாம் பாகம் பாண்டிய இளவரசியை சேரமன்னன் வீரரவி தன் நாட்டிற்குக் கடத்தி வந்ததில் இருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். வீரத்துடன் இணைந்த சாதூரியமே வெற்றியை பறிக்க வழிவகுக்கும். பாண்டிய இளவரசியைக் கடத்தி போவதை அறிந்து அவர்களைத் தொடர்ந்து வந்த பாண்டிய உபசேனாதிபதி இந்திரபானு தன் அழகிய முகத்தை விகாரமாக்கி அடையாளத்தையே துறந்து சிறைபட்டிருக்கும் இளவரசியை தந்திரமாகத் நெருங்கினாலும் சேரமன்னன் கண்ணில் இருந்து தப்பமுடியாமல் போகிறது. இந்தப் பாகம் முழுவதும் சேர மன்னன் வீரரவியே ஆக்கிரமித்திருக்கிறார். மன்னனின் வீரங்கள் சிலவற்றை மட்டும் கோடிட்டு காட்டி அவரின் கயமை சூழ்ச்சிகளும் தன் அதீத கோபத்தில் நிலை தடுமாறி எடுக்கும் முடிவுகளால் எதிர்கொள்ளும் அவதிகளுமே அதிகம் காட்டப்பட்டிருக்கிறது. இந்திரபானுவுக்கு உதவிய சேர குருநாதர் பரதபட்டரை தன் கண் பார்வையிலே வைத்துக் கொண்டு மக்களிடம் அவருக்கு இருக்கும் அபிரிமிதமான செல்வாக்கை தேசதுரோக பட்டத்தின் மூலம் மன்னன் முறியடிக்க முயன்றாலும் அதில் தோல்வியே தழுவுகிறார். கோட்டாற்றுக் கோட்டை வீரபாண்டியனின் வசம் போனதை தெரியாத சேரமன்னன் தன் பெரும் படை அங்கே வென்றுவிடும் என்று காத்துக் கொண்டிருக்கக் காலம் கடந்து வந்து சேர்ந்த செய்தியும் ஏமாற்றத்தையே அளிக்கிறது. சேரநாட்டைக் காப்பாற்ற குருநாதர் பரதபட்டர் போட்ட திட்டங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவரைச் சிறையிலடைத்துக் காரியங்களை நிறைவேற்றும் வீரரவியால் வீரபாண்டியனின் திட்டங்களை அசைக்கக் கூட முடியாமல் போகிறது. கோட்டாற்றுக் கோட்டையில் இருந்து தன் படைகளுடன் சேர தலைநகர் பரலியை நோக்கி முன்னேறுபவர் போடும் திட்டங்கள் அனைத்தும் சேரமன்னன் திட்டங்களை ஒத்தே அதற்கான பதிலடியாக அமைந்ததே சேரமன்னன் வீரரவி மரணத்தைத் தழுவ காரணமாகிறது. இப்பாகம் முழுவதும் போர் நுணுக்கங்களும் அதற்கான காரியத்தை உண்டாக்கும் சம்பவங்களும் என்று அனைத்தும் சேர மண்ணிலே நிகழ்கிறது. அதர்மத்தின் பாதையில் மன்னன் பயணிப்பது அவர்களின் குருநாதரையே எதிராகத் திரும்பச் செய்துவிடுகிறது. கோட்டாற்றுக் கோட்டை காவலரின் மகளான குறிஞ்சி வீரபாண்டியனுக்கு முழுநேர ஒற்றனாகவே மாறிவிடுகிறாள். வீரரவியின் வீரமரணத்திற்குப் பிறகு பரலியை இந்திரபானுவிடம் ஒப்படைத்து பாண்டிய இளவரசியையும் அவனுக்கு மணமுடித்து வைத்துவிட்டு கொற்கைக்கே திரும்பி விடுகிறார் பாண்டிய இளவரசன் வீரபாண்டியன்.
ராஜ முத்திரை (இரண்டு பாகங்கள்)
Reviews
There are no reviews yet.