Description
கேத்தும் மெர்சிடிசும் தன்பாலின இணையர்கள். ஓர் அதிகாலைப் பொழுதில் அவர்களின் படுக்கையறையை உடைத்துக்கொண்டு நுழையும் ஒரு கும்பல், மெர்சிடிஸைச் சுடுகிறது; அவர்களின் வளர்ப்பு நாய் பிரியாவைச் சுட்டுக் கொல்கிறது; கேத்தைக் கண்களைக் கட்டி யாரும் அறிந்திராத இடத்துக்குக் கொண்டுசெல்கிறது. அதன் பிறகு கேத்துக்கு என்ன நடக்கிறது? மெர்சிடிஸ் என்ன ஆனார்? பல ஆண்டுகளுக்குப் பிறகு கேத் எழுதிவைத்த காகிதங்கள் அவரது தமக்கை மகள் தேசியின் கைகளுக்கு வருகின்றன. சிறைப்பட்டிருந்த காலத்தில் நடந்த சித்திரவதைகள், நினைவுக் குறிப்புகள், கிரேக்கப் புராணங்களினூடான கற்பனைப் பயணங்கள், கவிதைகள் எனப் பல்வகையாக விரவிக் கிடக்கும் இக்காகிதங்களிலிருந்து கேத் என்னும் தனித்துவமான பாலியல் அடையாளங்கொண்ட பெண்ணை மீட்டெடுக்கிறார் தேசி. அக்காகிதங்களில் விடுபட்டுள்ள இடைவெளிகளைத் தேடி நிரப்ப முயல்கிறார். ஒரு லெஸ்பியனாக கேத்தின் அனுபவம் மாற்றுப்பாலின அடையாளத்துக்கு அழுத்தம் தரும் அனுபவம் மட்டுமல்ல, ஒரு தனிமனுஷியாக அவரது கனவுகள், சோகங்கள், இழப்புகள் இவற்றினூடான வாழ்க்கைப் பயணமும்தான். தன் பாலியல் அடையாளத்தை எதிரிடையான சந்தர்ப்பங்களிலும் தக்கவைத்துக்கொள்ளும் மனவுறுதிக்கும் தனிப்பட்ட வாழ்வியல் ஏக்கங்களுக்கும் இடையேயான போராட்டம் இந்த நாவலில் உணர்ச்சியுடன் வெளிப்படுகிறது. ‘வளர்ந்த’ நாடுகளிலும் தன்பாலின அடையாளம் இயல்பானதாக இல்லாமல் சர்ச்சைக்கும் ஒடுக்குதலுக்கும் உரிய ஒன்றாக இருப்பதை இது உரக்கச் சொல்கிறது. தன்பாலினம் சார்ந்த புனைவுகள் அருகிய தமிழ்ச் சூழலில் இதன் வரவு ஒரு பெரும் திறப்பாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.