Description
வாயுமைந்தன் மலையின் உச்சி ஏறி சீதையை தேட கிளம்புகிறார். அவர் வழியில் சந்திக்கும் சிக்கல்களும், அதை முறியடிக்கும் அவரது சமயோசித புத்தியும், அவர் இலங்கைக்குள் சென்று சீதையை சந்தித்து ராமனின் வேதனையை சொல்லி அன்னையின் இலச்சினையை பெற்று ராமனிடம் விரைந்து கண்டேன் சீதையை என்று சொல்லும்வரை இருக்கும் படலம்.
என்னுரை:
உலகம் தன்னுள் பிறந்த உத்தமர்களைப் பற்றி இடையறாது விதம் விதமாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த உத்தமர்களின் பின்னால் உலக மக்கள் போக வேண்டும் என்பது மட்டும் காரணமல்ல. அந்த உத்தமர்களை பார்த்து இன்னும் உத்தமர்கள் வர வேண்டும் என்பதும் காரணம். ஆலமரம் விழுது விட்டு தோன்றுவது போலவாம் இது. இது கருணையைக் கொண்டு கருணையை ஊற வைத்தல்.
ஸ்ரீ ராமன் உத்தமன். ஸ்ரீராம காவியம் உத்தமமானது. உங்களுக்குள் உத்தம குணங்களை தோற்றுவிக்கக்கூடியது. உத்தமர்களுக்கு வழி காட்டக்கூடியது. உருவாக்கக் கூடியது.
தன்னைப் பற்றி தெளிவாகச் சிந்தித்து தன் குறைகளை தெரிந்து, புரிந்து யோசிப்பவர்கள் ஸ்ரீராமனைக் கொண்டாடுவார்கள் என்பதில் ஐயமேயில்லை.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பெரும் சக்தி தர்மத்திலிருந்து பிறழவில்லை. இன்னா செய்தாரையும் கருணையோடு நினைக்கின்ற ஒரு மனப்பக்குவம் ஸ்ரீராமன் என்கிற மானுடனுக்கு இருந்தது.
அந்த மானுடன் கதையின் ஒரு பகுதி சுந்தரகாண்டம்.
மனைவியை இழந்து தனிமையில் இருந்த ஸ்ரீராமனுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்த கால கட்டம் இது. நிச்சயம் ஜெயிப்போம். இந்தத் துயரம் தற்காலிகம் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்த நேரம் இது.
வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும், ஒரு படையை நிகர்த்த பலமுள்ள உடன்பிறப்பு கூடவே இருப்பினும், விதியின் வலியால் மனைவியை ஸ்ரீராமன் பிரிய நேரிட்டது.
மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரம்மச்சாரி கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன்மீது ஆட்சி செலுத்த வல்லவரும், இணையில்லாத பலம் மிக்கவரும் அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகப் பேசுபவரும், பேச்சில் வல்லமை உடையவரும், சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீ ஆஞ்சநேயரின் துணை ஸ்ரீராமனுக்குத் தேவைப்பட்டது.
ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு மறைமுக உதாரணம்.
Reviews
There are no reviews yet.