சந்தனக்கலரில் அரக்குக் கலர் பார்டரும், அதே நிற ரவிக்கையும், காதுகளில் கல் ஜிமிக்கிக் குடைகள் குழைந்தாட, கூந்தலில் சூடியிருந்த குண்டு மல்லிப் பூச்சரம் வலது புறம் தொங்க அவளின் நடைக்கு ஏற்ப அசைந்தாடியது கூட அழகுக்கு அழகு சேர்த்து மஞ்சுளாவை தேவதை போலாக்கி விட்டிருந்தது. தாய் வீட்டு உறவுகள் புடைசூழ வெள்ளிப் பால் சொம்புடன் நாணம் மேலிட, தோழியர்களின் கேலியும் கிண்டலும் அவளின் செந்தூரக் கன்னம் மேலும் செவ்வர்ணக் குழம்பு பூசப்பட்டாற்போல் சிவந்து போனது. “மஞ்சும்மா… சொன்னது மனசுல இருக்கட்டும் தாயி…” அத்தனை தோழியர்கள் கூட்டத்திலும் அவசரமாய் அன்னபூரணி மஞ்சுவின் தோள் தொட்டு அவள் காதுகளில் மட்டும் கேட்கும் வண்ணம் ரகசியமாய் சொல்லி வந்த வரவிற்கு ஏதுவாக வெள்ளிச் சிமிழிலிருந்த குங்குமப் பொட்டை நெற்றி வகிட்டில் இட்டு விட்டுச் சென்றாள். “ஆ…ஹா… மாமியாருக்கு வந்ததுமே ஐஸ் வெச்சுட்டியாடி… கள்ளி, ஃபர்ஸ்ட் நைட் ரூம்க்கு விஷ் பண்ணி அனுப்பாறங்க…” குமாரி லதா விலாவில் இடித்தாள்… கதவு திறக்கும் வரையிலும் அரிதாரம் பூசின அப்பட்டமான தன் நடிப்பை புறந்தள்ளிவிட்டு வெகு இயல்பாய் அறைக்குள் பிரவேசித்தாள். சந்தனக் கட்டில் வேலைப்பாடுகள் அசரடிப்பதாக இருந்தாலும், அதற்கும் ஒருபடி மேலாக பூ வேலைப் பாடுகள் மனதை கவர்ந்து நாசியை வருடிற்று. அகிலன் மேல்சட்டை பொத்தான்கள் ஒன்றிரண்டு திறந்தவாக்கில் மார்பின் கருமையான கேசம் அழகு மிளிரத் தெரிய, கழுத்திலாடும் உருட்டு மைனர் செயின் அறைவிளக்கொளியில் தகதகத்தது. நிதானமாக அவனைப் பார்த்தாள். “அழகாகத்தான் இருக்கிறான். புறத் தோற்றத்தில் ஒரு குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால்… மனசு ம்… மனசு போகப் போகத் தெரிந்துவிடும். அன்னபூரணி சொன்ன அதே விசயத்தை அகிலன் மறைக்காது மனைவியிடம் தெரிவித்து விடும் பட்சத்தில் வெகுளித்தனமான மனிதன். மறைத்து விடும் பட்சத்தில்… ம்… ஹ்…” “என்ன மஞ்சுளா… நின்னுட்டே பார்த்துட்டிருக்கே. உட்காரும்மா…” மென்மையாய் அவளைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்து மஞ்சத்தில் அமர வைத்து, அவளின் அழகுக் கரங்களிலிருந்த பால் சொம்பைத் தானே வாங்கி டீபாயின் மீது வைத்துவிட்டு அருகில் அமர்ந்து முகவாயைத் தொட்டு நிமிர்த்தி விழிகளோடு விழிகளை ஒரு சில கணங்கள் உறவாட விட்ட நேசத்தில் மஞ்சுளா மொத்தமாய் நெகிழ்ந்து போனாள். “நான் ரொம்பக் கொடுத்து வெச்சவன் மஞ்சுளா. நீ கொள்ளை அழகா இருக்கே இந்த உடையலங்காரத்துல…” நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான். நெஞ்சுப் பிரவாகத்தில் மின்சாரம் பரவிற்று. காது மடல்களில் இதழ் மென்மையாய் உரசின மாத்திரத்தில் உடல் துவண்டது. “செல்லம்… ஐ லவ் யூ ஸோ மச்ம்மா…” கிசுகிசுப்பான அவனின் குரலில் கிறங்கிப் போனாள்… லேசாய் அணைத்து மடியில் குழந்தை போல போட்டுக் கொண்டான். இத்தனை நேசம் மிக்கவனா இவன்… ஆக, தான் தான் கொடுத்து வைத்தவள் சொல்லப் போனால். போதும்… இந்த அணைப்பும், தன்மையும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தெரிவிக்கும் விதம். “கண்ணம்மா… நல்லா ஃப்ரியா படுத்துக்கோடா செல்லம். கூச்சமே வேணாம். கணவன், மனைவின்றதைக் காட்டிலும் நல்ல நண்பர்களாக முதல்ல பேசுவோம்…” மஞ்சுளா மெத்தை மீது கணவனின் மடி மீது தலை வைத்து புது சுகத்தில் சொல்லொணா லயிப்பில் இருந்தாள்.
Reviews
There are no reviews yet.