Description
விடைகள் இல்லாத கேள்விகள்
குற்றங்களும் அவை சார்ந்த உணர்ச்சிகளும் பல்வேறு விதமானவை. குற்றம் சார்ந்த உணர்ச்சி என்றதும் இயல்பாகவே குற்ற உணர்ச்சி நினைவுக்கு வரக்கூடும். தீவிரமாக விழித்திருக்கும் மனசாட்சியும் அழுத்தமான தார்மீக மதிப்பீடுகளும் கொண்ட ஒருவருக்கு இந்தக் குற்ற உணர்ச்சியே அவர் பெறக்கூடிய அதிகபட்ச தண்டனையாக அமையக்கூடும். செய்யாத குற்றத்திற்கான பழியைச் சுமப்பது இதன் மறுபுறத்தில் இருந்தாலும் இதே வகையான உணர்ச்சியைத் தரக்கூடும். தீவிரமான மனசாட்சியும் வலுவான நியாய உணர்வும் கொண்டவர்களுக்கு இந்தப் பழி தாள முடியாத சுமையாக மாறிவிடக்கூடும். அத்தகைய சுமையைத் தன் பால்ய பருவத்திலிருந்து சுமந்துவருபவனைப் பற்றிய கதைதான் கிருஷ்ணமூர்த்தியின் ‘தழல்’.
நாவலில் கதை இருக்கலாம். ஆனால் கதைகள் எல்லாம் நாவலாகிவிடுவதில்லை. கதைகளுக்கான சுவாரஸ்யம், அடுத்தடுத்த நகர்வுகள், அழுத்தமான சம்பவங்கள் முதலானவை ஒரு நாவலில் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். நிகழ்வுகள், பாத்திரங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு நகரும் நாவல் இவற்றின் உதவியுடன் அல்லது இவற்றின் வாயிலாக வாழ்வின் விரிந்து பரந்த தன்மையையும் அதன் பன்முகப் பரிமாணங்களையும் சிக்கல்களையும் தழுவியபடி விரிவுகொள்ள வேண்டும். அதற்கான முனைப்பையேனும் கொண்டிருக்க வேண்டும். தேர்ந்துகொண்ட கதைக்களம், பாத்திரங்கள், அவர்களின் ஊடாட்டங்கள் ஆகியவற்றைச் சித்தரிப்பது நாவலின் இலக்கு அல்ல; வழிமுறை. இந்தப் பாதையின் வழியே வாழ்வின் தீராப் புதிர்களையும் அடிப்படைகளையும் வாழ்வு குறித்த நிரந்தரமான கேள்விகளையும் முடிந்தால் புதிய கேள்விகளையும் விசாரித்துப்பார்க்கும் பயணமே நாவல். இந்த விசாரணையே அதன் இலக்கு; கதை, கதாமாந்தர்கள் முதலானவை இந்த இலக்கை அடைவதற்கான வழித்தடங்கள்.
அழுத்தமான கதையையும் சிக்கல்கள் நிரம்பிய கதாபாத்திரங்களையும் கொண்டுள்ள ‘தழல்’, விடை தெரியாத கேள்வியொன்றைத் தன் அடிச்சரடாகக் கொண்டுள்ளது. இந்தக் கேள்விக்கு விடையளிக்க முயலும் தவற்றை நாவலாசிரியர் செய்யவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் விடையளிப்பது நாவலாசிரியரின் வேலை அல்ல. அது தத்துவவாதிகள், நீதி போதகர்களின் வேலை. பிரச்சினையின் பன்முகப் பரிமாணங்களையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தி, பிரச்சினை குறித்த வாசகர்களின் புரிதலை விரிவுபடுத்தி, பிரச்சினை குறித்த அவர்களது விசாரணையைத் தூண்டுவதே ஒரு நாவலின் பணி. “இயல்பு நிலை”யிலிருந்து விலகியவனாகத் தோற்றம் கொள்ளும் மார்ட்டினின் பிரச்சினை என்ன என்பது வாசகருக்குப் புலப்படும் தருணத்தில் அந்தப் பிரச்சினையின் வெவ்வேறு பரிமாணங்களும் வெளிப்பாடுகளும் துலங்கத் தொடங்குகின்றன. இந்தப் பரிமாணங்களும் வெளிப்பாடுகளும் மார்ட்டினின் பிரச்சினை குறித்த புரிதலைக் கூர்மைப்படுத்தி, மார்ட்டினைப் போன்ற பல்வேறு நபர்களையும் அவர்களது உணர்வுகளையும் நினைவுபடுத்துகின்றன. பழியைச் சுமப்பதன் வலி ஒரு தனிநபரை எந்த அளவுக்கு ஆழமாகப் பாதிக்க முடியும் என்பதையும் கதையின் போக்கில் உணர்த்துகின்றன.
பெரும் மனச்சுமையுடன் வாழ்ந்துவரும் மார்ட்டின் நடைமுறை வாழ்வு குறித்த தன் அணுமுறையில் ஏற்கத்தக்க, ஏற்கவியலாத பல்வேறு கூறுகளைக் கொண்டிருக்கிறான். அவன் நடத்தையில் ஏற்படும் புதிர்கள் உருவாக்கும் குழப்பங்களை ஒரு கணமும் பிரியாத நிழல்போல அவனுடனிருக்கும் மனச்சுமையின் பின்னணியில் பார்க்கும்போது சில தெளிவுகள் கிடைக்கலாம். விடைகளை முன்வைக்காமல் சித்தரிப்பின் துல்லியத்திலும் விவரங்களிலும் நாவலாசிரியர் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தப் பயணத்தை வாசகர்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. கேள்விகளுக்குக் கீழே விடைகளைத் தரும் எளிய கேளிக்கை மனநிலையை முற்றாகத் தவிர்க்கும் கிருஷ்ணமூர்த்தி விடைகளை வாசகர்களே கண்டடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். நிகழ்வுகளினூடே விழும் இடைவெளிகள், உரையாடல்களுக்கு நடுவில் உருக்கொள்ளும் மௌனங்கள், நடத்தைகளின் நிழலாய் நீளும் குழப்பங்கள் ஆகியவை வாசகருக்கான புழங்கு வெளியை நாவலுக்குள் உருவாக்கித் தருகின்றன. இதுவே இந்தப் பனுவலை நாவல் வடிவத்திற்கு அருகில் கொண்டுசெல்கிறது. விடைகளையும் எளிய சூத்திரங்களையும் தவிர்ப்பதன் மூலம் கிருஷ்ணமூர்த்தி இந்த நாவலைக் கவனமான வாசிப்புக்குரியதாக மாற்றுகிறார்.
துல்லியமாகச் சொல்வதானால் எட்டுக் கதாபாத்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு இந்த நாவல் நகர்கிறது. இவர்களில் பிரதானமான மார்ட்டினின் மீதான கவனம் இயல்பாகவே அதிகமாக உள்ளது. இதில் போதிய கவனம் எடுத்துக்கொள்ளும் நாவலாசிரியர் இதர பாத்திரங்களுக்கு மேலும் சிறிது நியாயம் செய்திருக்கலாம் என்று தோன்றும் விதத்தில் சில பாத்திரங்களின்மீது அடர்த்தியான நிழல் கவிந்திருக்கிறது. மார்ட்டினின் வாழ்வைப் புரட்டிப்போட்ட பாத்திரங்களுக்கும் இந்தக் கதிதான் எனும்போது மார்ட்டின் எனும் புதிர் வலிந்து சிக்கலாக்கப்படுவதாகத் தோன்றுகிறது. கதாசிரியரின் புத்திசாலித்தனமும் சிந்தனைகளும் உரையாடல்கள் முதலானவற்றின் வழியாகக் கதைப்போக்கில் வெளிப்படலாம். ஆனால் சர்க்கரையின் அளவு கூடிவிட்ட காப்பியைப் போல இவையும் அளவை மீறும்போது ருசியைக் குலைத்துவிடுகின்றன. இத்தகைய சில இடங்கள் தழலின் வெளிச்சத்தை மங்கச் செய்கின்றன.
இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல் கடந்துவிடும் அளவிற்குச் சில தருணங்கள் வலுவாகவும் உயிர்ப்புடனும் உருப்பெற்றிருக்கின்றன. பழி எனும் சிலுவை ஒரு சிறுவனின் தோள்மீது ஏறும் தருணம் அவற்றில் ஒன்று. நாவலின் அடிநாதம் எனச் சொல்லத்தக்க அந்த இரவுக் காட்சி தனக்குரிய இயல்புடன் வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. தன் மகனால் மார்ட்டினுக்கு ஏற்படும் கடுமையான நெருக்கடிகள் அழுத்தமும் மௌனங்களும் கூடிய நிகழ்வுகளாக வெளிப்படுகின்றன. இருப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளிகளை மார்ட்டினின் அனுபவங்கள் மூலமாக உணர முடிகிறது. செய்த குற்றத்திற்கான குற்ற உணர்வின் சுமை, செய்யாத குற்றத்திற்கான பழியின் சுமை ஆகிய இரண்டும் நேரெதிரான புள்ளிகளிலிருந்து பிறந்தாலும் இரண்டின் வீரியமும் ஒன்றாகவே இருப்பதையும் கதைப்போக்கில் உணர முடிகிறது. பழியின் சுமையும் குற்ற உணர்வின் சுமையும் அவரவர் தேர்வுகள். தனிநபரின் ஆளுமையைப் பொறுத்து இவற்றின் வலிமை கூடலாம் அல்லது குறையலாம். ‘தழல்’ நாவலில் குற்ற உணர்வு கொள்ள வேண்டியவர்கள் அதை விலக்கிவிட்டு வாழ்வதும் தவறு இழைக்காதவர்கள் பழியின் சிலுவையைச் சுமந்தபடி வாழ்வதும் ஒன்றையொன்று சார்ந்தவை. குற்ற உணர்வுக்கும் பழியின் சுமைக்குமான காரணங்களை உணர்த்தக்கூடிய வாழ்நிலைகள் இவை. குற்ற உணர்வு, பழியின் சுமை ஆகியவை வாழ்வின் நுட்பமான புதிர்களாக மாறும் விந்தையின்மீது ‘தழல்’ வெளிச்சம் பாய்ச்சுகிறது. பழியின் சுமை ஏன் இறக்க முடியாத சிலுவையாக மாறுகிறது என்ற கேள்விக்கான விடையை நாவலாசிரியர் தரவில்லை. வாசகர்கள் தங்களுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறார்.
கிருஷ்ணமூர்த்தி தீவிரமானதொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பதுடன் அதன் தீவிரம் குன்றாமல் கையாண்டிருக்கிறார். வாழ்வின் சிக்கல்கள், கேள்விகளுக்கான தீர்வுகளாகவும் பதில்களாகவும் நாவல் வடிவத்தைக் கருதாமல் தீவிரமான கேள்விகளையும் விசாரணைகளையும் விடைதேடும் பயணங்களையும் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சி பாராட்டத்தக்கது. இந்த முயற்சியே இந்த நாவலின் வலிமை.
அரவிந்தன்
தழல்
Reviews
There are no reviews yet.