Description
கைகளால் தான் இறுக்கிப் பிடித்ததும், சிறைக்கோடிக்கு அழைத்து வந்ததும் ஒரு பெண்ணென்பதைக் கண்டதும் பலவித உணர்ச்சிகளோடு சிறிது கோபத்திற்கும் உள்ளான உதயபானு, “எதற்காக இந்த ஆண் வேடத்தில் இங்கு வந்தாய்?” என்று உஷ்ணம் ஒலித்த குரலில் கேட்டான்.
தலைப்பாகை நீக்கப்பட்டதால் அவிழ்ந்து நீள வீழ்ந்துவிட்ட கருங்குழலுடனும் அவன் கைகள் இறுக்கிப் பிடித்ததால் கசங்கிய சட்டையுடனும் காணப்பட்ட அருணா, அவனுக்குப் பதில் சொல்லாமல் முறுவல் காட்டினாள்.
அவள் பெயர் அவனுக்குத் தெரியாதே தவிர, அவள் சுனையில் குளித்த சுந்தரியென்பதை முகத்தைக் கண்டதும் புரிந்து கொண்டான் உதயபானு. தவிர, அவள் அரச நந்தவனச் சுனையில் குளித்ததால், அரசகுமாரிகளில் ஒருத்தியென்பதையும் புரிந்துகொண்டிருந்தான். ஆனால், இரு அஸானி சகோதரிகளில் அவள் யாரென்பது மட்டும் புரியாததால், மீண்டும் கேள்வியை வீசினான்.
“இருவரில் நீ யார்?” என்று.
“எந்த இருவரில்?” என்று வினவினாள் அருணா. குழலைக் கோதி முடித்தவண்ணம்.
“அஸானி சகோதரிகளில்!” என்றான் உதயபானு. “எங்கள் இருவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
“கேள்விப்படாதவர் ராஜபுதனத்தில் கிடையாது!”
“இருவரில் யார் அழகென்று சொல்லிக் கொள்கிறார்கள் ராஜபுதனத்தில்?”
“ஒருவருக்கொருவர் தோல்வியில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.”
“நல்லவேளை” என்ற அருணா, “நான் இளையவள். என் பெயர் அருணா” என்றாள் ஆடைகளைச் சரிப்படுத்திக்கொண்டே.
“அருணா! அருணா! எத்தனை அழகான பெயர்!” என்று கூறிய உதயபானு, அவளை உற்றுப் பார்த்தான்.
“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று அருணா வெட்க நகை காட்டினாள்.
உதயபானு கூறினான் அவளை நோக்கி, “ராஜகுமாரி! நீ முதலில் மன்னிக்க வேண்டும்!” என்று.
அருணா, “எதற்கு மன்னிப்பு?” என்றாள்.
உதயபானு சொன்னான்: “அன்று… சொல்ல சங்கோஜமாயிருக்கிறது… நான் வேண்டுமென்று பார்க்கவில்லை. பக்கத்தில் ஏக பள்ளமாயிருக்கிறதே என்று பார்த்தேன்.”
அருணா இதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. மௌனமே சாதித்தாள்.
“செய்தது தவறுதான். இருப்பினும் மன்னிப்பு இல்லையா?” என்றான் உதயபானு.
“தெரிந்து செய்வதுதான் குற்றம். அதுவும் அபராதப்பட்டவர்கள் அதைப் பொருட்படுத்தினால்தான் அதைப்பற்றிக் கவலை” என்று லேசாக இழுத்தாள் அருணா. பிறகு “அது இருக்கட்டும். இன்று ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துகொண்டீர்கள்?” என்று கேட்டாள்.
உதயபானு உண்மையைச் சொல்லி விட்டான்.
“அரசகுமாரி! நான் இந்தச் சிறையிலிருந்து தப்ப முடிவுசெய்து விட்டேன். இங்கு சாப்பாடு கொண்டுவருபவனை கட்டிப் போட்டுச் செல்வதுதான் வழி என்றும் தீர்மானித்தேன். ஆகையால் நடந்த விபரீதம் இது. சாப்பாடு கொண்டுவந்தது யார் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் முறையுடன் நடந்து கொண்டிருப்பேன்” என்று கூறினான் ராஜபுத்திர சேனாதிபதி. மேலும் சொன்னான்: “ராஜகுமாரி! தினசரி இந்த மாதிரி ஆள் சாப்பாடு கொண்டு வருவதாயிருந்தால் நான் இங்கேயே சிறையில் இருக்கிறேன்” என்று. அவன் முகத்தில் ஆர்வம் தெரிந்தது.
அருணா தீர்க்க சிந்தனையில் இறங்கினாள். முடிவாகப் பேசியபோது அவள் குரலில் உறுதியிருந்தது.
“நீங்கள் உங்கள் முதல் யோசனையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்! என்னைக் கட்டிப்போட்டுவிட்டுச் செல்லுங்கள். ராஜபுதனம் பெருத்த அபாயத்தில் இருக்கையில் நமது சொந்த உணர்ச்சிகள் அதன் நன்மைக்கு இடையூறாக இருக்கவேண்டாம்!” என்றாள் அவள் திடமான குரலில்.
“உன் அத்தை மகன் சுபலசிம்மன் ரத்தம் இன்னும் என் கையில் இருப்பதை மறந்துவிட்டாயா அருணா?” என்று வினவினான் உதயபானு.
“சுபலசிம்மன் உயிருக்கு ஆபத்தில்லை. நேற்று முதல் காயம் வாசியாகி வருகிறது. நீங்கள் சென்று மொகலாயர் வலையிலிருந்து ராஜபுதனத்தைக் காக்க முற்படுங்கள்” என்று கூறினாள் அருணா.
“இப்பொழுது என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்?” என்று வினவினான் உதயபானு.
“நான் சாப்பாடு கொண்டுவந்ததால் காவலர்கள் சற்று விலகியிருக்கிறார்கள். நான் யாரென்பது அவர்களுக்குத் தெரியாது. உங்கள் பதவிக்குத் தக்கபடி சிறையிலும் மரியாதை செலுத்த மன்னர் உத்தரவிட்டிருப்பதால் உணவு நேரங்களில் காவலர்கள் சிறையின் அருகாமையிலிருந்து விலகி நிற்கிறார்கள். ஆகவே முதல் யோசனைப்படி சீக்கிரம் என்னைக் கட்டிப்போட்டு, வெளியேறுங்கள்!” என்றாள்.
“உன்னைக் கட்டிப்போட்டுவிட்டா?”
“ஆம்!”
“என் உயரம் அதிகம். நீ அதிக உயரமல்ல. உன் உடையில் நான் சென்றால் காவலர்கள் கவனிக்கமாட்டார்களா?”
“கவனித்தால் தப்பிச்செல்ல இதைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று தன் கச்சையிலிருந்து குறுவாளைக் காட்டினாள். அத்துடன் மேலும் சொன்னாள்: “இதே தலைப்பாகையை நீங்கள் சுற்றி அங்கியால் உடலைப் போர்த்திக் குனிந்து செல்லுங்கள். நம்மிருவருக்கும் உயரம் அப்படியொன்றும் அதிக வித்தியாசமில்லை” என்று கூறி, குறுவாளையும் அவன் கையில் திணித்தாள்.
உதயபானு
Reviews
There are no reviews yet.