Description
மீராவின் பாட்டுக்கு ஒரு தனியிடம் உள்ளது போல், மீராவின் வசனத்துக்கும் ஒரு தனியிடம் உண்டு. தமிழ் உரைநடைக்குக் கூட இத்துணை இதம் (Rhythm) உண்டா என வியக்கவைக்கும் நடை அவருடையது.
அவர் ரசித்த ராபர்ட் லிண்ட், நான் ரசிக்கும் ஆஸ்கார் வைல்ட், ஷா, இவர்களின் ஆங்கிலம் போல், பஷீரின் மலையாளம் போல், கிஷன் சந்தரின் உர்தூ போல் குறும்பும் இளமையும் துள்ளும் ஆழமான தமிழ் மீராவுடையது. அவர் நடையில் தன்னம்பிக்கையின் நிமிர்வும் மிடுக்கும் உண்டு. ஆனால் ஆடம்பர ஆரவாரமோ ஆணவச் செருக்கோ இருப்பதில்லை. அலங்கார அணிகள் இல்லை. தாலி, இறுக்கமான உள்ளாடை இவற்றையும்கூட உதறிவிட்ட புதுமைப் பெண்போல் நடக்கும் பெருமித நடை அது. பாமரரின் மொழி (Slang)யை, “சட்டைக் கையைச் சுருட்டி ஏற்றிக்கொண்டு, உள்ளங் கைகளில் எச்சில் துப்பிக்கொண்டு வேலையில் இறங்கும் ஒரு மொழி” என்று கார்ல் சாண்ட்பெர்க் வர்ணித்தார். அந்த மொழிக்கும் மிக நெருங்கிய எளிமையும், கவிதையின் எழிலும் உடையது மீரா நடை!
ஜுனியர் விகடனில் 2-11-83 முதல் 1-1-84 வரை மீரா எழுதிவந்த பத்துக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. ‘மகியின்’ அற்புத ஓவியங்களுடன்! ‘வா இந்தப்பக்கம்’என அழைப்பில் தொடங்கி ‘திருவிழா வருகிறது, தேர் வருகிறது’ என்று தேர்தல் வேடிக்கை காட்டி முடிகிறது நூல். இறுதி வரியும் (அந்தாதி போல்) ‘வா இந்தப் பக்கம்’ என்று முடிவது மீராவின் தீராத விளையாட்டுக் குறும்பைக் காட்டுகிறது. ஒவ்வொன்றும் வேறுவேறு பொருட்கள் பற்றி எழுதப் பெற்றவை எனினும் அனைத்திலும் நம் அரசியல் சமுதாய வாழ்வே பிரதிபலிக்கிறது. வெளியிட்ட பத்திரிகை அரசியல், சமுதாய அவலங்களை அம்பலப்படுத்தும் இதழ் என்பதால் நேர்ந்தது அல்ல இது. மீராவின் இயல்பே அதுதான் என்பதால் விளைந்தது. அவருக்கென்று தனிப்பட்ட தேவைகள், தனிப்பட்ட கனவுகள் எதுவுமில்லை. அவர் ஒரு தனி, மனிதத் தீவல்லர்.
Reviews
There are no reviews yet.