Description
வானில் சூரியன் உக்கிரமாய் தகித்திருக்கும் உச்சி வேளை…
அந்தப் பிரமாண்ட விளையாட்டு திடலில் அரங்கன் பள்ளியின் விளையாட்டுக் கொண்டாட்டம் வெகு விமர்சையாய் நடைபெற்று கொண்டிருநந்து. அந்தத் திடலே மனித தலைகளால் நிரம்பியபடிக் காட்சியளித்தது. மாணவர்கள் ஆசிரியர்கள் என எல்லோரும் வியர்வையால் குளித்திருந்தனர்.
அந்தக் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்களில் ஒரு சாரார் போட்டிகளில் ஆர்வமாய் பங்கேற்று தங்கள் திறமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்க, அவர்களை உற்சாகப்படுத்தியபடி கேலரியில் மற்றொரு கூட்டம் ஆராவாரித்துக் கொண்டிருந்தது.
அதுவும் ஓட்டப்பந்தயம் நிகழும் போது எழும் சத்தம் அங்கே ஓடுபவர்களின் வேகத்தையும் வெற்றியையும் கூட தீர்மானித்தது.
போட்டிகளையும் வெற்றிகளையும் அந்தப் பெரிய திடலில் ஓர் ஓரமாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஆசிரியர் மகேந்திரன் தன் கம்பீர குரலால் அறிவித்துக் கொண்டிருந்தார். அந்த இடத்திலுள்ளவர்களை அவரது தமிழ் உச்சரிப்பு வெகுவாக கவர்ந்தது.
அனைத்து போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் வெற்றி கோப்பையை யார் தட்டிச் செல்வது என்ற பூசலால் அரங்கத்தில் பெரும் குழப்பமே உண்டானது. நேதாஜி டீமும் ஜான்சி ராணி டீமும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன.
சமாதானம் செய்ய வேண்டிய ஆசிரியர்களும் கூட மாணவர்களுடன் இணைந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியாக அந்த விழாவின் தலைமை குழுவினர் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இரு அணிக்கும் ஓட்டபந்தயம் ஒன்று நடத்துவது என முடிவெடுத்தனர்.
இரு அணியிலிருந்தும் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். நேதாஜி அணியின் தலைவன் ரகு முன்னே வந்து நிற்க, ஜான்சி ராணி அணியிலிருந்து யாருமே அவனை எதிர்த்து பங்கேற்கத் தயாராக இல்லை.
ரகுவின் வேகத்திற்கு ஈடுகொடுப்பது சற்றே அசாத்தியமான காரியம் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போழுது உண்மையில் பிரச்சனை சுலபமாக முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில் ஜான்சி ராணி அணியிலிருந்து செந்தமிழ் போட்டியில் கலந்து கொள்கிறேன் என முன்வந்து நின்றாள்.
ஆணுக்கு நிகராய் பெண் என்பதைத் தாண்டி இருவருமே ஓட்டப்பந்தயத்தில் வல்லமை பொருந்தியவர்கள் என அந்தப் பள்ளிக்கே தெரியும். ஆணுடன் பெண் போட்டியிடுவதா என்ற சர்ச்சைகளை அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாற்றியமைத்தார். அவர்கள் இருவருமே சரிசமமான பலம் கொண்டவர்கள் என்று உரைத்து போட்டிக்கு சம்மதம் உரைக்க, இருவரும் போட்டிக்குத் தயாராக களத்தில் இறங்கினர்.
அவ்வளவுதான். அந்த திடலே பெரும் கூச்சலும் ஆரவாரமுமாக மாறியது.
ஆயிரத்து இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. எல்லோருமே அந்தப் போட்டி நடக்கும் களத்தையே ஆர்வமாய் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்.
ரகு மற்றும் செந்தமிழ் இருவரின் பார்வையும் ஒரு சேர மோதிக் கொள்ள, அவர்கள் இருவருக்குமே வெற்றியை ஈட்டுவது மட்டுமே குறிக்கோளாய் இருந்தது.
அந்த திடலில் அமைக்கப்பட்ட நீள்வட்டப்பாதையை இருமுறை வலம் வந்து யார் முதலில் போட்டியை முடிக்கிறார்களோ அந்த அணிக்கு வெற்றிக் கோப்பை என்று தீர்மானிக்கப்பட்டது.
உடற்கல்வி ஆசிரயர் குரலை உயர்த்தி, “ஆன் யுவர் மார்க்… கெட் செட்… கோ” என்றார்.
இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் சமமான வேகத்துடன் முதல் சுற்றை முடித்தனர்.
இறுதி சுற்று… தங்களின் முழு முயற்சியோடு ரகுவும் தமிழும் வேகமெடுக்க, சரிசமமாய் ஓடும் அவர்களில் யார் வெற்றியைத் தட்டி செல்வார்களோ என்ற படபடப்பில் எல்லோரும் ஓட்டபந்தய வீதியையே கூர்ந்து கவனித்திருந்தனர்.
அதுவல்லவா போட்டி என்றளவுக்கு அந்த இடமே கைத்தட்டல் ஒலியில் அதிர்ந்து கொண்டிருந்தது.
“தமிழச்சி தமிழச்சி தமிழச்சி” என்று பல குரல்கள் ஓங்கி ஒலித்த அதே நேரத்தில் இன்னொரு கூட்டம், “ரகு ரகு ரகு” என்று ஆரவாரித்தன.
அந்தப் போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, கடைசி சில விநாடிகள்…
அந்த விளையாட்டு திடலே வெற்றியை யார் வீழ்த்துவார்கள் என்ற பெரும் ஆவலில் இருக்க…
தொப்பென்று படுக்கையின் மீதிருந்து கீழே விழுந்தாள் செந்தமிழ். அவளின் கனவு கலைந்தது.
வாடி என் தமிழச்சி- இந்நாவல் ஒரு ரொமேன்டிக் த்ரில்லர் வகை. நாயகன் நாயகியின் ஈகோ சண்டைகள் காதல் திருமணம் ஊடலுடன் சேர்த்து சுவாரசியமான கொலை பிண்ணனியையும் ஆராய்வதில் விறுவிறுப்புடன் நகரும் கதைகளம்.
படித்து மறவாமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reviews
There are no reviews yet.