உங்கள் வாசிப்பனுபவம் என்ன செய்யும்?
தன்னுடைய கட்டுரைத் தொகுப்புகளின் வழியே உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை, அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை, தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் வாசகனின் முன்பு எழுத்தாளர் வைத்திருக்கிறார்.
உலக இலக்கியம், சினிமா, இசை, பயணங்கள் என அவரது கட்டுரைகள் ஒரு வாசகனுக்குத் தரும் தகவல்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டுபவை. குறிப்பாக இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒரு இளம் படைப்பாளிக்கு நிறைய உள்ளீடுகளையும், சிறுகதைகள் குறித்த சில நுட்பங்களையும் கொண்டுள்ளது. அந்த நுட்பங்களைக் குறித்த ஒரு சுருக்கமான கட்டுரையைத் தருவதே இப்பதிவின் நோக்கம்.
நீங்கள் ஒரு மொழியின் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் தேர்ந்த வாசகராக இருந்தால் உங்கள் வாசிப்பனுபவம் உங்களைச் சும்மா இருக்க விடாது என்பது என் கணிப்பு.
உங்கள் வாசிப்பனுபவம் என்ன செய்யும்?
நீங்கள் நாவலிலும், சிறுகதைகளிலும் சந்தித்த மனிதர்களின் உணர்வுகள் உங்களைப் படைப்புலகின் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்திச் செல்லும் தானே. ஒவ்வொரு தேர்ந்த வாசகனும் தனக்குள்ளே ஒரு படைப்புலகை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். சிறு பிள்ளைகள் களிமண் கொண்டு விதவிதமான பொம்மைகள் செய்து மகிழ்வது போலவே அவனும் தன்னளவில் சொற்களைக் கொண்டு கவிதைகளை, கட்டுரைகளை, சிறுகதைகளை எழுதிப் பார்த்துக் கொள்கிறான். அப்படிப்பட்ட ஒரு வாசகனுக்காகச் சிறு வெளிச்சம் என இப்புத்தகத்தைச் சொல்வேன்.
நீங்கள் ஒரு மொழியில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் சிறுகதையே அதற்கான உகந்த வடிவம் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்து கைவர வேண்டும் என்றால் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். இந்தப் புத்தகத்தில் அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) பற்றிய கட்டுரை ஒன்றிருக்கிறது, ஆம் பாரன்ஹீட் 451 எழுதிய அதே பிராட்பரி தான். அதில் ஒரு நேர்காணலில் பிராட்பரி சொல்லும் வார்த்தைகள் முக்கியமானவை, “எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். படிப்பு, இசை, எழுத்து என அயராமல் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுவே வாழ்வின் மீதான எனது பற்றுதல்“. உங்களுக்கு வாழ்வின் மீதான பற்றுதல் தரும் விஷயங்கள் எவை என யோசித்திருக்கிறீர்களா?
அடுத்ததாக ‘சிறுகதைகள் எழுத நினைப்பவர்கள் நிறையச் சிறுகதைகளைப் படிக்க வேண்டும். எழுத்தின் நுட்பங்களை யாரும் கற்றுத் தந்து விட முடியாது. வாசிப்பே அவற்றைப் புரிய வைக்கும்’ என்பது எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து. அது உண்மையும் கூட, ஒரு மொழியின் குறிப்பிட்ட இலக்கிய வடிவத்தை ஆழ்ந்து வாசிப்பது என்பது உங்கள் படைப்புலகிற்கான உறுதியான அடித்தளம் அமைக்கும் ஒரு செயல்.
‘கதையின் தலைப்பு என்பது கதையின் திறவுகோல் போன்றது’ என்று எழுதியிருக்கும் ஆசிரியர் அதற்கு உதாரணமாகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவியான கமலாதாஸின் ‘கடலின் விளிம்பில் ஒரு வீடு’ என்ற கதையின் கவித்துவமான தலைப்பை முன்வைக்கிறார். என்னளவில் நீங்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று இது என்பேன்.
‘சிறுகதை ஆசிரியனுக்கு நினைவுகளைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். கதை முழுவதும் வெறும் நினைவுகளாக வே இருந்து விட்டால் சலிப்பாகி விடும். புனைவும் நினைவும் கலந்து எழுதும் போது தான் கதை சிறப்பாக இருக்கும்.’ தமிழின் சிறந்த சிறுகதையாக ஆசிரியர் குறிப்பிடும் சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையும், 2000ம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளரான Gao Xingjian எழுதிய Buying a Fishing Rod for my Grandfather என்ற சிறுகதையும் நினைவுகளையும், கால மாறுபாடுகளையும் சிறுகதை எழுதுபவர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கற்றுத் தரக் கூடும்.
‘சிறுகதை எழுத விரும்புகிறவர்களுக்கு ரஸ்கின் பாண்ட்டின் (Ruskin Bond) இல்லாத கண்கள் (The Eyes have it) ஒரு உத்தியை கற்றுக் கொடுக்கிறது’. அது என்ன உத்தி என்பதனை கதையைப் படிக்கும் போது நிச்சயம் கண்டறிந்து விடுவீர்கள். ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்காக எழுதிய கதைகளில் பெரும்பாலானவை அறம் சார்ந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டவை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பெரியவர்களும் கொண்டாட வேண்டிய ஒரு சிறந்த கதாசிரியர் ரஸ்கின் பாண்ட்.
‘சிறுகதை ஆசிரியன், கதையில் நிறையச் சொல்லத் தேவையில்லை. குறைவான கச்சிதமான உரையாடல்களின் வழியே கதையினை நேர்த்தியாக உருவாக்கி விட முடியும்’. இதற்கு உதாரணமாக Etgar Keret எழுதிய கனவுத்தன்மை கொண்ட The Crazy Glue என்ற கதையைக் குறிப்பிடுகிறார். யதார்த்தத்தைக் கனவுத்தன்மையோடு கை கோர்க்க வைத்து அதனை அழுத்தமாக வாசகர்களது மனதில் பதிய வைக்கும் உத்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
சிறுகதை வடிவத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இன்னொரு முக்கியமான தகவல் இந்த நூலில் தரப்பட்டிருக்கிறது. தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய ரஷ்யாவின் சிறுகதை சிற்பியான ஆன்டன் செகாவ் தான் எழுத விரும்பிய கதைக்கருக்களைத் தனது நோட்புக்கில் குறித்து வைத்திருந்தார் என்பதும், அது செகாவின் நோட்புக் எனத் தனியான வெளியாகியுள்ளது என்பதுமான தகவல் தான் அது.
‘சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடவும் சவாலானது. மொழியைக் கையாளுவதிலும், கதைகளை விவரிப்பதிலும் மிகுந்த கட்டுப்பாடும், லயமும், ஒருமையும் தேவை’ என்ற முக்கியமான அறிவுரையையும் முன்வைக்கிறார்.
‘சிறுகதை ஆசிரியர்கள் பேராசை கொண்டவர்கள். எதையும் கதையாக்கிவிட முயற்சி செய்வார்கள்’ என்பதும் எவ்வளவு பெரிய உண்மை என்பது கதைகளின் உலகில் சஞ்சரிப்பவர்களுக்குப் புரியும்.
சிறுகதைகள் மட்டுமன்றி சில கவிஞர்களைப் பற்றிய தகவல்களும், அவர்களது கவிதைகளும், அந்தக் கவிதைகளுக்கு எஸ்.ரா. வின் சிறு விளக்கங்களும் என நீள்கிறது இந்தப் புத்தகம். இந்த நூலில் கவிஞர் வைத்தீஸ்வரன் எழுதிய ‘மன்னிப்பு’ என்ற தலைப்பிட்ட கவிதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
மன்னிப்பு
மரங்கள் ஓயாமல்
அழிந்து கொண்டிருந்த போதிலும்
குயில்களுக்கு இன்னும்
கோபமில்லை யாரிடமும்
அதன் குரல் இன்னும்
காதலையே பாடுகின்றன
இனி வரப் போகும்
“ஒரு மனிதனுக்காக”
எழுத்தாளன் கூட ஒரு வகையில் இந்தக் குயில் போலத் தான் இல்லையா? நூலகங்கள் தரைமட்டமாக்கப்பட்ட போதும், புத்தகங்கள் தடை செய்யப்பட்ட போதும், அவன் இயற்கையின் பேருண்மைகளை, பேரன்பின் உடனிருப்பை, அடக்குமுறைக்கு எதிரான போர் குரலை, மனித மனதின் எண்ணற்ற உணர்வுகளை, தீராத பக்கங்களில் எழுதிக் கொண்டே தானே இருக்கிறான், இனி வரப்போகும் ஒரு வாசகனுக்காக.
நன்றி
vetrinadai.com
LEAVE A COMMENT