மராம்பு நூல் விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்
Nandhakuamr N2023-01-07T11:22:51+00:00ஆசிரியர் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் பிறந்தவர். IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்தவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
Healing and Meditation வகுப்புகள் எடுக்கும் இவரது முதல் குறுநாவல் ‘என்னைத்தேடி’ ஏற்கனவே வெளியாகி ஆங்கிலத்தில் The Search என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது குறுநாவல்.
வாழ்வாதாரத்திற்காக அறியாத நிலத்தில் அவதிப்படுபவர்கள் ஆடுஜீவிதம், அல் கொஸாமா போன்ற நாவல்களில் வருகிறார்கள். அவற்றிற்கும் இந்த நாவலுக்கும் உள்ள வித்தியாசம் இதன் மையக்கதாபாத்திரம் பெண். மொழி தெரியாது, அந்நிய நிலத்தில், அதிக படிப்புமில்லாது செல்வதற்கு குடும்ப சூழ்நிலையை விட வேறெதுவுமே ஊக்கத்தை உண்டுபண்ண முடியாது.
ஐந்து பெண்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஐந்துபேரின் கதையை ஒரு சிறிய நாவலில் சொல்லி, வாசகர் மனதில் ஏற்றுவது கடினம், அதுவும் கதையின் மையக்கருத்து வேறொன்றாக இருக்கும் பொழுது. நசீமா அதை எளிதாகக் கடந்திருக்கிறார். Comatose stateல் இருக்கும் கணவனிடம் காணொளியில் விடாது அன்றைய நிகழ்வுகளைச் சொல்லும் ஆஷியா (இன்னும் மூன்று வயிறுகள் சேரப்போகிறது அவளுக்கு), சம்பாதித்து தங்கைகளுக்கு மணம்முடித்து, பத்து வருடங்கள் காதலனுக்குக் காத்திருக்கும் மித்ரா (உலகின் எந்த ஆணும் இத்தனை காத்திருப்புக்கு Worth இல்லை பெண்ணே!), அனுதினம் பன்னிரண்டு மணிநேரம் கார் ஓட்டி சம்பாதிக்கும் பூஜா ( கவனமாக ஓட்டாவிட்டால் பைனை சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள்) God mother ஆக ஜானு (பையனுக்கு மணமுடித்தால் வயதாகி விடும் எனக்கு), இவர்களுடன் திக்குத்தெரியாது சிக்கிக்கொண்ட வள்ளி.
பிராப்ளம்ஸ்கி விடுதியில் லிடியா அம்மாவிடம் யாவும் நலமே என்று சொல்வது போல் இதில் வள்ளி சொல்கிறாள். உண்மையில் பல பெண்கள் தன் வேதனைகளை அம்மாவிடம் சொல்லாததைப் பார்த்திருக்கிறேன். வலி நிறைந்த முகத்தை மறைக்க அழகு சாதனங்கள் உதவுகிறது என்ற வரி Disturb செய்து அதிகம் யோசிக்க வைத்தது.
திருமந்திரம், திருக்குறள் படிக்கும் பெண் நசீமா. வள்ளி, கிறிஸ்துவின் படத்தின் முன்னால் நின்று அய்யனாரே நீ தான் காப்பாற்றவேண்டும் என்று இறைஞ்சுகிறாள். தனக்குத் தெரியாத எதையும் இந்த நாவலில் எழுத முயற்சிக்கவில்லை நசீமா. துபாய் வாழ்க்கையும், Healing வகுப்புகளும் அங்குள்ள பெண்களின் பிரச்சனைகளை அறிந்துகொள்ள உதவியிருக்கும். இவையே இந்த நாவலின் பலங்கள். பெண்கள் பதிவிரதைக்கு இன்னல்வரும், பழையபடி தீரும் வகைக்கதைகளை விட்டு இது போன்ற கதைகளை எழுத (குறிப்பாக அயல்நாட்டில் வேற்றுக் கலாச்சாரத்தில் வாழும் பெண்கள்)
முன்வர வேண்டும். பெண்கள் அதிகம் பங்கு பெறாத எந்த மொழி இலக்கியமும் வளர்ந்ததாக வரலாறே இல்லை.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ. 130.
LEAVE A COMMENT