Description

உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சிறு மணல் துகள் முதல் பிரம்மாண்டமான பால்வெளி வரை நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அவற்றுக்கான தனிப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறான சில விஷயங்களைத் தொகுத்துச் சொல்வதே ‘பளிச் 10’. நம்மில் பலர் தினசரி காலையில் தேநீர் அருந்துகிறோம். அந்தத் தேநீர் எப்படித் தோன்றியது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. பொ.யு.மு. 2737ம் ஆண்டில் சீனாவின் பேரரசராக இருந்த ஷென்னோங், ஒருநாள் தோட்டத்தில் அமர்ந்து வெந்நீர் குடிக்கிறார். அப்போது தற்செயலாக அருகில் இருந்த தேயிலைச் செடியில் இருந்த சில தேயிலைகள் அதில் விழ, அதன் சுவை அவரைக் கவர்கிறது. அப்படித்தான் தேநீர் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தேநீர் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அல்லது பார்க்கும் சீப்பு, டூத் பிரஷ், மழை, வெங்காயம், உப்பு, எறும்பு, தேசியக் கொடிகள் என எல்லாவற்றுக்கும் அதற்கான சில குறிப்பிட்ட தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி சுவாரஸ்யமான குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இது 2கே கிட்ஸ்களின் காலம். கம்ப்யூட்டர், செல்போன், டிவி என அவர்கள் நேரத்தை ஆக்கிரமிக்கப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதையும் நீட்டி முழக்கி எழுதினால் படிக்க அவர்களுக்கு நேரமில்லை. அதனால் எல்லாவற்றைப் பற்றியும் சுருக்கமாகப் பளிச்சென்று பத்து வரிகளில் இந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறோம். ‘பளிச் 10’ பகுதி இந்து தமிழ்த் திசை நாளிதழில் தொடராக வெளிவந்து பரவலான கவனிப்பைப் பெற்றது.

Reviews

There are no reviews yet.


Be the first to review “பளிச் 10”

Related Products