நூற்றி முப்பத்தியோரு பங்கு & பிற கதைகள் (ரமேஷ் ரக்சன்) நூல் விமர்சனம்-ஸ்ரீதேவி செல்வராஜன்
Nandhakuamr N2023-01-12T08:55:03+00:00ரமேஷ் ரக்சனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘16’ க்குப் பின் வெளிவந்த ‘ரகசியம் இருப்பதாய்’ (சில கதைகள் தவிர) ‘பெர்ஃப்யூம்’ சிறுகதை தொகுப்புகளும் ’நாக்குட்டி’ நாவலும் நகரப் பின்னணியில் எழுதப்பட்டவை. நான்காவது சிறுகதை தொகுப்பான ‘நூற்றி முப்பத்தியோரு பங்கு’ கொரோனா காலத்தின் கொடையாக ஊர்க்கதைகளை சுமந்து அச்சிலேறியிருக்கிறது. ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையுமே சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஒருவருக்கொருவர் நேரடி தொடர்பில்லாதபோதிலும் ஒரே ஊருக்குள் வசிக்கும் போது ஒருவரின் கதைகள் மற்றவருக்கு எப்படி வந்து சேர்கிறதென்பதே இந்த தொகுப்பின் சுவாரஸ்யம். ஒரு கதையின் முக்கிய கதாப்பாத்திரம் மற்றொரு கதையில் ஒரு பெயராக மட்டுமே மின்னலென வந்து போகும். அதற்கான காரணமாக அந்த கதாப்பாத்திரத்தின் சாதியோ, மதமோ அல்லது தொழிலோ அதைத் தாண்டிய அந்தரங்கமோ இருக்கிறது. வாசிக்கும் நமக்கு இவர்களின் வழியே அந்த ஊரின் ஒரு கலங்கலான சித்திரம் காணக் கிடைக்கிறது.
’பெர்ஃப்யூம்’ தொகுப்பில் இருபது பக்கங்களில் சொல்லப்பட்ட கதை எழுதிய ரமேஷ் ரக்சன் இந்த தொகுப்பிலுள்ள ’எட்டே முக்கால்’ கதையை ஐந்தே பக்கங்களில் எழுதியிருக்கிறார். இரண்டு கதைகளுமே பக்க அளவில் அவற்றுக்கான தேவைகளை கொண்டிருப்பவை. பொதுவாகவே ரமேஷ் கதைகளை வாசிக்கும்போது கவனத்துடனே தான் வாசிக்க வேண்டியிருக்கும். போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சொல்லோ, வரியோ அல்லது ஒரு நிகழ்வோ கதையின் போக்கையே மாற்றிவிடக் கூடியதாய் இருப்பதை நாம் உணரலாம். அதை தவற விடும் பட்சத்தில் கதையை முழுதாக நெருங்க விடாமல் போகும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
ரமேஷ் ரக்சன் கதைகள் ஒரு புள்ளியில் தொடங்கி அதன் வழியே பல்வேறு திறப்புகளை நமக்கு கடத்திச் செல்பவை. யூகங்களின் வழி நாம் கண்டடையும் ஒன்றை தவிரவும் ஏராளமான புள்ளிகள் அதில் பொதிந்திருக்கும். அதை தேர்ந்து கொள்ளும் திறனை வாசகனின் கையில் கொடுத்திருப்பதே ரமேஷ் ரக்சனின் சாமர்த்தியம். கதையின் நுணுக்கங்களை நாம் கண்டடைய ஒரு பறவைப்பார்வையில் கதையை உள்வாங்கி அணுக வேண்டியது அவசியம்.
எழுத்தைப் பொருத்தவரையில் எப்போதும் தீவிரத்தன்மை கொண்ட கதைகளையே ரமேஷ் ரக்சன் எழுதி வந்திருந்தாலும் இந்த தொகுப்பில் இரண்டு சிறுகதைகள் வாசிக்கும்போதே வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை. கெட்ட வார்த்தைகள் இங்கு வசைச்சொற்களாக இல்லாமல் நண்பர்களிடையே இயல்பாகப் பேசப்படும்போதும் பொதுவில் புழங்கப்படும்போதும் புன்னகையை வர வைக்கின்றன. சொந்த ஊரில் பலரின் செவி கடந்து நம் வாசல் வந்து சேரும் ஊர்க்கதைகள் தான் இங்கு அச்சாகியுள்ளன. அவ்வகையில் ரமேஷ் ரக்சன் கொடுத்திருப்பது தரமான கைக்குத்தல் அரிசி அவலைத்தான். புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வெறும் வாயை மெல்ல வேண்டியதில்லை.
கோயில் கொடை, சாமியாடி, நம்பிக்கைகள், சாதி, சாதியினாலும் பிரிக்க முடியாத மனித பிணைப்புகள், சாவு வீட்டில் வாய்விட்டு அழ முடியாத உரிமை, அழையா விருந்தாளியாய் வாசலில் வந்தமரும் மதம், அது வீட்டுக்குள் உண்டாக்கும் பிரிவினைகள், காமத்திடம் தோற்று நிற்கும் அதிகாரம், கணவன் – மனைவி உறவுகள் , தகப்பன் –மகன் மனக்கசப்பு உள்ளிட்ட எல்லாவித உணர்வுகளையும் இந்த தொகுப்பில் நெருங்கிப் பார்க்க முடிகிறது.
ரமேஷ் ரக்சன் எழுத்துகள் அமைதியான ஆழமான கடலைப் போன்றவை. இப்போதைக்கு ஒரு கரையில் நின்று கால்களை நனைக்க மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது. ஆழத்தை அடைவது அவரவர் திறமை.
பிரதிக்கு,
Be4Books
#24, Shop No.B, First Floor, S.G.P Naidu Complex, Velachery main road, Velachery, Chennai -600 042.
Contact & watsup No.90424 61472
www.be4books.com
வங்கி கணக்கு எண்:
A/c No.34804520231
Yaavarum Publishers
SBI Bank, Chinamaya Nagar Branch
Ifsc code:SBIN0007990. or
GPAY 9940021472
Watsup :9042461472
LEAVE A COMMENT